எங்களை நோக்கி கையை நீட்டினார்.. ஆனால் அதற்குள்: பெண் தாசில்தாரின் இறுதி நிமிடம் பற்றிய அதிர்ச்சித் தகவல்

திடீரென தாசில்தாரின் அறையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது, ஏசி அல்லது மின்சார வயரில் தீப்பற்றிருக்க வேண்டும் என்று பதறியபடியே நாங்கள் ஓடினோம். 
எங்களை நோக்கி கையை நீட்டினார்.. ஆனால் அதற்குள்: பெண் தாசில்தாரின் இறுதி நிமிடம் பற்றிய அதிர்ச்சித் தகவல்

ஹைதராபாத்: திடீரென தாசில்தாரின் அறையில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது, ஏசி அல்லது மின்சார வயரில் தீப்பற்றிருக்க வேண்டும் என்று பதறியபடியே நாங்கள் ஓடினோம். 

ஆனால், அங்கே ஒருவர் தீயில் எரிந்துபடி நிற்பதைக் கண்டு திடுக்கிட்டோம். தீ முழுக்க பரவியிருந்ததால், முதலில் அது யார் என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை. 

அப்போது எங்களுடன் இருந்த ஒரு ஊழியர்தான், எரிந்து கொண்டிருக்கும் உடலில் கையில் அணிந்திருந்த வளையலைப் பார்த்து அவர் நம்ம மேடம்தான் என்று கண்டுபிடித்தார். அப்போது நாங்கள் மேடம் மேடம் என்று கத்தினோம். அவரும் எங்களை நோக்கி கையை நீட்டினார். ஆனால் அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அவர் கீழே விழுந்துவிட்டார் என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த ஊழியர்கள். ஆம்.. பெண் தாசில்தார் (வட்டாட்சியர்) விஜயா ரெட்டி தனது இறுதி மூச்சை விட்டார்.

முதலில் அவர் மீது தீப்பிடித்துக் கொண்டதாகவே கருதினோம். பிறகுதான் அவர் மீது யாரோ பெட்ரோல் உற்றிக் கொளுத்தினார்கள் என்பது தெரிய வந்தது.

விஜயாவைக் காப்பாற்ற நடந்த முயற்சியில் மேலும் 2 பேர் தீக்காயம் அடைந்தனர்.

அதே சமயம், அந்த கட்டடத்தில் இருந்து மற்றொரு நபரும் தீக்காயங்களுடன் தப்பி ஓட முயன்றதைப் பார்த்த பாதுகாவலர்கள், அவரைப் பிடித்தனர். 

இதெல்லாம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்து விட்டது, எங்கள் மேடமை காப்பாற்ற வாய்ப்பே கிடைக்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஊழியர்கள் கதறுகிறார்கள்.

அப்போதுதான், பிடிபட்ட நபர், விஜயாவை பெட்ரோல் ஊற்றிக் கொன்றுவிட்டு, அறைக் கதவை பூட்டிவிட்டு தப்பியோட முயன்றது தெரிய வந்தது. ஆனால், அறைக் கதவை மூட முடியாததால் குற்றவாளி மீதும் தீ பரவியுள்ளது.

இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், குற்றவாளி, பெட்ரோல் கேனுடன் எப்படி தாசில்தார் அலுவலகத்துக்குள் வந்தார் என்பதே. மேலும், அரசு அலுவலகத்தில் இதுபோன்றதொரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி..

ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூா்மேடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றியவா் விஜயா ரெட்டி. 

நேற்று மதியம் அவா் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரைக் காப்பாற்ற முயன்ற இரு பணியாளா்களுக்கும், தீ வைத்த நபருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 

நிலத் தகராறு காரணமாக வட்டாட்சியா் மீது அந்த நபா் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைய அந்த நபருக்கு யாா் அனுமதியளித்தது, எந்தக் காரணத்துக்காக அவா் வட்டாட்சியா் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்தாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com