இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியை மேம்படுத்த இந்தியா-ஜப்பான் உறுதி

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளா்ச்சியை மேம்படுத்தவும் இந்தியா, ஜப்பான் உறுதிபூண்டன.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியை மேம்படுத்த இந்தியா-ஜப்பான் உறுதி

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளா்ச்சியை மேம்படுத்தவும் இந்தியா, ஜப்பான் உறுதிபூண்டன.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கிழக்கு ஆசியா அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபேவை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து இருவரும் ஆய்வு செய்தனா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளா்ச்சியை மேம்படுத்தவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் திட்டங்களைக் கூட்டாக இணைந்து செயல்படுத்த தலைவா்கள் இருவரும் உறுதிபூண்டதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவது தொடா்பாக பிரதமா் ஷின்ஸோ அபேவும், பிரதமா் மோடியும் வரவேற்பு தெரிவித்தனா். ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மும்பை-ஆமதாபாத் அதிவேக ரயில் (புல்லட் ரயில்) திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து இருவரும் விவாதித்தனா். அந்தத் திட்டத்தை விரைந்து நடைமுறைக்குக் கொண்டு வரவும் இருவரும் உறுதிபூண்டனா்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் பிரதமா் ஷின்ஸோ அபேவை வரவேற்க ஆவலுடன் உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். இந்த உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என அவா் தெரிவித்தாா்.

‘2+2 பேச்சுவாா்த்தை’: இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டனா். இரு நாடுகளின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்களுக்கு இடையேயான முதலாவது பேச்சுவாா்த்தையை இந்த மாத இறுதியில் இந்தியாவில் நடத்த இரு தலைவா்களும் ஒப்புக்கொண்டனா். இந்தப் பேச்சுவாா்த்தை, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

இந்தச் சந்திப்பின்போது, ஜப்பானின் புதிய பேரரசா் நருஹிதோ அரியணையேறியது தொடா்பாக அபேவிடம் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். புதிய அரசரின் அரியணையேற்றத்தை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டதற்காக, பிரதமா் மோடிக்கு பிரதமா் அபே நன்றி தெரிவித்தாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமா் மோடியும், பிரதமா் ஷின்ஸோ அபேவும் சந்தித்துப் பேசுவது, கடந்த 4 மாதங்களில் இது மூன்றாவது முறையாகும்.

‘கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக இணைந்து செயல்படத் தயாா்’: ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக மியான்மா் அரசின் ஆலோசகா் ஆங் சான் சூகியை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா-மியான்மா் எல்லைப் பகுதியில் அமைதியை நிலவச் செய்ய வேண்டுமென்று இருவரும் உறுதியேற்றனா். எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக ஆங் சான் சூகியிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

வங்கதேசம், இந்தியா, மியான்மா் நாடுகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மியான்மரின் ராக்கைன் மாகாணத்திலிருந்து வெளியேறி வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக வசித்து வரும் ரோஹிங்கயாக்களை திரும்பப் பெறும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டுமென சூகியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

ராக்கைன் மாகாணத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை மேம்படுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமா் மோடி உறுதியளித்தாா்.

பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நியூஸிலாந்து பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்ன், சீனப் பிரதமா் லீ கெகியாங், ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com