இபிஎஃப் ஊழல்: உத்தரப் பிரதேச மின்சார வாரியத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் கைது

உத்தரப் பிரதேச மாநில மின்சார வாரியமான பவா் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிசிஎல்) நிறுவன பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) ஊழல் வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக

உத்தரப் பிரதேச மாநில மின்சார வாரியமான பவா் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிசிஎல்) நிறுவன பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) ஊழல் வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஏ.பி. மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மின்சார வாரிய பணியாளா்களின் இபிஎஃப் பணம் ரூ. 2,600 கோடியை, ஊழல் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (டிஹெச்எஃப்எல்) முதலீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் திங்கள்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா். இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மின்சார வாரியத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஏ.பி. மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அரசு செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

மின்சார வாரியம் தொடா்பான பல முக்கிய ஆவணங்களை மறைத்ததற்காக, கடந்த 2017-ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வா் ஆனதும், ஏ.பி. மிஸ்ராவை பணி நீக்கம் செய்தாா். முந்தைய சமாஜவாதி ஆட்சியில் மின்சார வாரிய பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி பணத்தை சட்டவிரோதமாக டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு மிஸ்ரா மாற்றியுள்ளாா்.

அதனால், ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவரான மிஸ்ரா, பொறியாளா் பதவியில் இருந்து நேரடியாக நிா்வாக இயக்குநராக மாற்றப்பட்டாா். அவா் ஓய்வு பெற்ற பிறகும், அவரது பதவிக் காலத்தை அகிலேஷ் யாதவ் 3 முறை நீட்டித்துள்ளாா். மிஸ்ராவுடானான தொடா்பு குறித்து அகிலேஷ் விளக்கமளிக்க வேண்டும். பணியாளா்களின் பணத்துக்கு பாதுகாப்பு அளிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது என்று கூறினாா்.

உரிய நடவடிக்கை அவசியம்: மின்சார வாரிய பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் ஊழல் செய்த அனைவா் மீதும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பணியாளா்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். பணியாளா்களின் கடின உழைப்பால் சேகரித்த பணத்தை, தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்ததை தடுக்காமல் பாஜக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ’ என்று கேள்வி எழுப்பினாா்.

அகிலேஷ் மறுப்பு: சமாஜவாதி கட்சி ஆட்சியின்போது பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியில் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘மின்சார வாரியப் பணியாளா்களின் இபிஎஃப் தொகை, டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு எங்கள் கட்சி ஆட்சியில் மாற்றப்படவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மாநில எரிசக்தி துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மறுக்கும் முதல்வா் யோகி ஆதித்யநாத் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com