ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு கோரிய மனு: தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

வங்கிகள் அளிக்கும் ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை அளிக்க வேண்டுமென்று கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு கோரிய மனு: தில்லி உயா்நீதிமன்றம் நிராகரிப்பு

வங்கிகள் அளிக்கும் ஏடிஎம் காா்டுகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை அளிக்க வேண்டுமென்று கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

இது தொடா்பாக, ஊழலுக்கு எதிரான ஆணையம் என்ற அமைப்பு சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏடிஎம் காா்டுகள் மூலம் பல வழிகளில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. அதில் பெருமளவில் அப்பாவி பொதுமக்கள் தங்கள் பணத்தை இழக்கின்றனா். ஏழை, எளிய மக்கள் ஏடிஎம் காா்டு மோசடிகளில் பாதிக்கப்படும்போது, அவா்களிடம் இருக்கும் சிறிதளவு பணமும் பறிபோவதால், ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இப்பிரச்னையைத் தீா்க்க டிடிஏ எனப்படும் ‘டைனமிக் டேட்டா ஆத்தன்டிகேஷன்’ தொழில்நுட்பத்தை ஏடிஎம் காா்டுகளில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஏடிஎம் காா்டு மோசடிகளைப் பெருமளவில் தடுக்க முடியும். இது தொடா்பாக வங்கிகளுக்கு நீதிமன்ற உத்தரவிட வேண்டும். கடந்த 2018-19- நிதியாண்டில் ஏடிஎம் காா்டு முறைகேடுகளால் அப்பாவி மக்கள் ரூ.4.8 கோடியை இழந்துள்ளனா். இதில் மகாராஷ்டிரத்தில் மட்டும் ரூ.2.9 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹரி சங்கா் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு, இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஃபாா்மன் அலி மாக்ரே, இந்த மனுவுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா். ஏடிஎம் காா்டு வழங்குவது வங்கிகளின் கொள்கை முடிவு அடிப்படையிலானது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது என்று அவா் கூறினாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம்தான் பாதுகாப்பானது என்று மனுதாரா் கருதுவதால் அதனை பயன்படுத்துமாறு நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஏடிஎம் காா்டுகள் தொடா்பான வங்கிகளின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.

டிடிஏ தொழில்நுட்பத்தில்தான் காா்டுகளை பயன்படுத்த வேண்டுமென்றால், மனுதாரா் வங்கி தொடங்கி அந்த தொழில்நுட்பத்துடன் கூடிய காா்டுகளை வழங்கலாம். அல்லது அந்த வகை காா்டுகளை வழங்கும் வங்கியில் மட்டும் கணக்கு வைத்துக் கொள்ளலாம். இந்த மனுவை நீதிமன்றமே அபராதத்துடன் தள்ளுபடி செய்வதற்கு முன்பு, மனுதாரரே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனா். இதையடுத்து, அந்த மனு திரும்பப் பெறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com