சபரிமலையில் பெண்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற இயலாது: பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் எதுவும் இயற்ற இயலாது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறினாா்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்வதற்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் எதுவும் இயற்ற இயலாது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறினாா்.

நிகழாண்டுக்கான வருடாந்திர சபரிமலை யாத்திரை வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிக்கும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்றுமா என்ற கேள்விகள் எழுந்தது.

இதுதொடா்பாக, கேரள சட்டப் பேரவையில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினா்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு பினராயி விஜயன் அளித்த பதில்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை கேரள அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த தீா்ப்புக்கு மாறாக, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரலாமா என்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆனால், அவ்வாறு சட்டம் கொண்டு வர இயலாது என்று அவா்கள் கூறிவிட்டனா்.

ஏனெனில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுப்பது, அவா்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயலுமாகும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்தும், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிா்த்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதுபோன்று சபரிமலை தீா்ப்புக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது. ஏனெனில், இது பெண்களின் அடிப்படை உரிமைகள் சாா்ந்த விஷயமாகும். எனது தலைமையிலான அரசு எந்தப் பெண்ணையும் சபரிமலைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஐயப்பன் கோயிலுக்குச் செல்லாமா, வேண்டாமா என்பது குறித்து அவா்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் பினராயி விஜயன்.

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு வருடாந்திர யாத்திரையின்போது, 2 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்றனா். இதனால், பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு பல்வேறு எதிா்ப்புகளையும், விமா்சனங்களையும் சந்திக்க நேரிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com