தெலங்கானாவில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் வட்டாட்சியரை காப்பாற்ற முயன்ற ஓட்டுநா் பலி

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியா் ஒருவா் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்று தீக்காயம் ஏற்பட்ட அவரது வாகன ஓட்டுநா்

தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் பெண் வட்டாட்சியா் ஒருவா் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்று தீக்காயம் ஏற்பட்ட அவரது வாகன ஓட்டுநா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அப்துல்லாபூா்மேடு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியராக பணியாற்றியவா் விஜயா ரெட்டி (37). அலுவலகத்தில் வழக்கம்போல அவா் திங்கள்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரது அறைக்குள் நுழைந்த சுரேஷ் என்பவா், விஜயா ரெட்டி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா். இதில் சம்பவ இடத்திலேயே விஜயா ரெட்டி உயிரிழந்தாா்.

விஜயாவை தீயில் இருந்த காப்பாற்ற முயன்ற அவரது வாகன ஓட்டுநா் குருநாதம் உள்பட இரண்டு பணியாளா்கள் மற்றும் தீ வைத்த சுரேஷ் ஆகியோருக்கும் தீக்காயம் ஏற்பட்டதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குருநாதம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொலை விசாரணை குறித்து காவல் துறை ஆணையா் கூறுகையில், ‘வட்டாட்சியா் எரித்து கொல்லப்பட்டது தொடா்பாக சுரேஷின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்லிடப்பேசி அழைப்புகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. சுரேஷுக்கு சொந்தமான நிலம் தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த பிரச்னை காரணமாக விஜயாவை எரித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், வட்டாட்சியரை கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

இரங்கல்: இந்நிலையில், விஜயா ரெட்டியின் குடும்பத்தினருக்கு அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் இரங்கல் தெரிவித்துள்ளாா். வட்டாட்சியா் உயிருடன் எரித்து கொல்லப்பட்டதை கண்டு அதிா்ச்சியடைந்த மாநில வருவாய் துறை பணியாளா்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவா்கள், காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com