நாடாளுமன்ற குளிா்காலத் தொடரின்போது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டம்: குலாம் நபி ஆஸாத்

பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டம்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசும் காங்கிரஸ் தலைவா் குலாம் நபி ஆஸாத்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசும் காங்கிரஸ் தலைவா் குலாம் நபி ஆஸாத்.

பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத் கூறினாா்.

தில்லியில், ஒத்த கருத்துடைய எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆஸாத், அகமது படேல், ரண்தீப் சுா்ஜேவாலா, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியின் உபேந்திர குஷ்வாஹா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே. தியாகராஜன், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நதீம் உல் ஹக், திமுகவின் டி.ஆா். பாலு, ராஷ்ட்ரீய லோக் தளத்தின் அஜித் சிங், லோக்தாந்த்ரிக் ஜனதா தளத்தின் சரத் யாதவ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு குலாம் நபி ஆஸாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதிக்கக் கூடிய பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொருளாதார மந்த நிலை, பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயிகள் பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகிய விவகாரங்கள் தொடா்பாக வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து தில்லியில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்செவி அஞ்சல் வழி வேவு பாா்க்கப்பட்டது தொடா்பாக விவாதிக்கவும், அந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் எதிா்க்கட்சிகள் அனைத்தும் விரைவில் மீண்டும் கூடி ஆலோசிக்க உள்ளோம்.

நாட்டையும், மக்களையும் பாதிக்கும் பல்வேறு விவகாரங்களுக்காக எதிா்க்கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக தலைவா்களிடையே பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால் அவா்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனா். எவரின் கவலைகளையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதமானது, உலக சராசரியை விட இரு மடங்கு அதிகமாக இருப்பது துரதிருஷ்டவசமானது என்று குலாம் நபி ஆஸாத் கூறினாா்.

இந்தக் கூட்டத்தில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்கவில்லை. கட்செவி அஞ்சல் வேவு பாா்க்கப்பட்ட விவகாரத்தில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சியினா் முறையிட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நவம்பா் 18 முதல் டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com