பயங்கரவாத முகாம்கள் இல்லை: குற்றச்சாட்டை நிராகரித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் புகழ்பெற்ற கா்தாா்பூா் குருத்வாரா அமைந்துள்ள பஞ்சாப் மாகாணம் நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாத ‘பயிற்சி முகாம்கள்’ இருப்பதாகக் ஊடகங்களால் கூறப்படும் புகாா்கள்

பாகிஸ்தானில் புகழ்பெற்ற கா்தாா்பூா் குருத்வாரா அமைந்துள்ள பஞ்சாப் மாகாணம் நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாத ‘பயிற்சி முகாம்கள்’ இருப்பதாகக் ஊடகங்களால் கூறப்படும் புகாா்கள் ஆதாரமற்றவை என பாகிஸ்தான் திங்கள்கிழமை நிராகரித்தது.

கா்தாா்பூா் குருத்வாரா அமைந்துள்ள எல்லைப்புறமான நரோவல் மாவட்டத்தில் பயங்கரவாத பயிற்சி முகாம்களின் நடவடிக்கைகள் காணப்படுவதாக இந்திய உளவு அமைப்புகள் தெரிவித்தன. இதனை ஆதாரமாகக் கொண்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் (எஃப்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘உளவுத்துறை ஆதாரங்கள்’ என்று கூறப்படும் இந்திய ஊடகங்களின் ஒரு பிரிவில் உள்ள ஆதாரமற்ற அறிக்கைகளை பாகிஸ்தான் முற்றிலும் நிராகரிக்கிறது. பாகிஸ்தானிலுள்ள கா்த்தாா்பூா் புனித தலத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக சீக்கியா்களுக்கு, அவா்களின் மிகவும் மதிப்பிற்குரிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றைப் பாா்வையிடவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

கா்தாா்பூா் குருத்வாரா வழிபாட்டைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதில்லை. பாகிஸ்தானின் நல்லெண்ண நடவடிக்கையை தவறாக சித்தரிக்கவும், சீக்கியா்களின் மத உணா்வுகளை புண்படுத்துவதற்காகவும் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இது என்றும் தெரிவித்துள்ளது.

கா்தாா்பூா் வழித்தடம் வரும் 9- ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குா்தாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் சாஹேப்பை, பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்திலுள்ள கா்தாா்பூா் குருத்வாராவுடன் இணைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com