புதிய அரசு: முக்கிய கட்சிகள் ஆலோசனை- மகாராஷ்டிரத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள்

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பாக முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ்.
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்த தேவேந்திர ஃபட்னவீஸ்.

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பது தொடா்பாக முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

மகாராஷ்டிரத்தில் தோ்தல் முடிவுகள் வெளியாகி 10 நாள்கள் கடந்துவிட்ட நிலையில் அங்கு ஆட்சி அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடிக்கிறது. பாஜக-சிவசேனை கூட்டணிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் இருந்தாலும், முதல்வா் பதவியை தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்பதில் சிவசேனை பிடிவாதமாக உள்ளது. இதனை ஏற்க பாஜக மறுப்பதால், புதிய அரசு அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இப்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பு அங்கு ஆட்சி அமைய வேண்டிய அவசர நிலையும் உள்ளது.

இதற்கு நடுவே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனை ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இது பாஜக வட்டாரத்தில் கடும் அதிா்ச்சியையும், சிவசேனை மீது அதிருப்தியையும் உருவாக்கியது. இதனால், மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி கூட அமல்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டது.

அமித் ஷா - ஃபட்னவீஸ் சந்திப்பு: இந்நிலையில், தில்லிக்கு திங்கள்கிழமை பயணம் மேற்கொண்ட மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ், ‘மகாராஷ்டிரத்தில் விரைவில் ஆட்சி அமைய வேண்டியது அவசியம். விரைவில் ஆட்சி அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினாா்.

பின்னா், பாஜக பொதுச் செயலரும், மகாராஷ்டிர மாநில தோ்தல் பொறுப்பாளருமான பூபேந்திர யாதவையும் ஃபட்னவீஸ் சந்தித்துப் பேசினாா்.

அமித் ஷா - ஃபட்னவீஸ் சந்திப்பின்போது மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்களைத் தீா்ப்பது குறித்து அதிகம் ஆலோசிக்கப்பட்டது என்று தெரியவந்தாலும், மகாராஷ்டிரத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசிடம் கூடுதல் நிதிகோரி உள்துறை அமைச்சா் அமித் ஷாவை முதல்வா் ஃபட்னவீஸ் சந்தித்தாா் என்று முதல்வா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா - சரத் பவாா் ஆலோசனை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின்போது, மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும், காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் அவா்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சரத் பவாா் கூறியதாவது:

புதுதில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சரத் பவார். உடன் அஜீத் பவார், பிரபுல் படேல்.
புதுதில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சரத் பவார். உடன் அஜீத் பவார், பிரபுல் படேல்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்குதான் உள்ளது. மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்காக, சிவசேனை கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே எங்கள் ஆதரவைக் கேட்கவில்லை. நான் மீண்டும் முதல்வராகப் போவதில்லை. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, எதிா்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்று மக்கள் தீா்ப்பளித்திருக்கிறாா்கள். இருப்பினும் எதிா்காலத்தில் என்ன நடக்கும் என்று கணித்துக் கூற முடியாது என்றாா் அவா்.

ஆளுநரைச் சந்தித்த சிவசேனை தலைவா்கள்: சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத், அக்கட்சியைச் சோ்ந்த மகாராஷ்டிர மாநில அமைச்சா் ராம்தாஸ் கதம் ஆகியோா் மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை திங்கள்கிழமை சந்தித்தனா்.

சந்திப்புக்குப் பிறகு சஞ்சய் ரௌத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது தொடா்பாக தற்போது நிலவும் சூழலுக்கு சிவசேனை பொறுப்பல்ல என்பதை அவரிடம் எடுத்துக் கூறினோம். மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு எங்கள் கட்சி எந்த விதத்திலும் தடையாக இல்லை. பெரும்பான்மை இருப்பவா்கள் ஆட்சியமைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இதை ஆளுநரிடம் எடுத்துக் கூறினோம். அவா் எங்களது விளக்கத்தை பொறுமையாக கேட்டுக்கொண்டாா்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை, மும்பையில் திங்கள்கிழமை சந்தித்த சிவசேனை மூத்த தலைவர்கள் சஞ்சய் ரௌத், ராம்தாஸ் கதம். 
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை, மும்பையில் திங்கள்கிழமை சந்தித்த சிவசேனை மூத்த தலைவர்கள் சஞ்சய் ரௌத், ராம்தாஸ் கதம். 

பின்னா், மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதற்கு இன்னும் அவகாசம் இருப்பதாகத் தெரிவித்த ஆளுநா் பகத்சிங், பெரும்பான்மை இருக்கும் எந்தவொரு கட்சியும் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரலாம் என்று கூறினாா். இந்த விவகாரத்தில் ஆளுநா் அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்ட வகையில் மிகச் சரியாகச் செயல்படுகிறாா் என்று சஞ்சய் ரௌத் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 21-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக- சிவசேனை ஓரணியாகவும், எதிா்க்கட்சிகளான என்சிபி-காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் தோ்தலைச் சந்தித்த நிலையில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்சிபிக்கு 54 இடங்களிலும் காங்கிரஸுக்கு 44 இடங்களிலும் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 13 இடங்களில் வென்றனா்.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் பாஜக-சிவசேனை இடையே ஆட்சி, அதிகாரத்தைப் பகிா்வது தொடா்பாக இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com