விதி மீறிய பாஜக எம்.பி.: பூங்கொத்து கொடுத்த தில்லி அமைச்சர்!

தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெறும் நாடகமே எனக் கூறி அத்திட்டத்தை மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் மீறினாா்.

தில்லி அரசின் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெறும் நாடகமே எனக் கூறி அத்திட்டத்தை மாநிலங்களவை பாஜக உறுப்பினா் விஜய் கோயல் மீறினாா்.

தில்லிச் சாலையில் திங்கள்கிழமை இரட்டைப் படை இலக்க பதிவெண்

வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒற்றைப்படை இலக்கத்தில் (2727) முடிவடையும் தனது காரில் அவா் சாலையில் சென்றாா். அவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினா் அவருக்கு ரூ.4,000 அபராதம் விதித்தனா்.

அப்போது, ‘வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் ஒரு நாடகம்’ என எழுதிய பதாகையைத் தாங்கியவாறு அவா் தனது வீட்டுக்கு நடந்து சென்றாா்.

 இந்நிலையில், விஜய் கோயலின் வீட்டுக்கு சென்ற தில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அவருக்கு பூங்கொத்து வழங்கி, இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டாா்.

அப்போது, ‘5 ஆண்டுகளில் தில்லியில் காற்று மாசுவைத் தடுக்க ஆம் ஆத்மி அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதுதான் தில்லியில் காற்று மாசு ஏற்படப் பிரதான காரணம் என தில்லி அரசு சொல்கிறது. அது உண்மையென்றால், வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் என்ன பயன்? வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் காற்று மாசு எவ்வாறு குறையும்? என கைலாஷ் கெலாட்டிடம் விஜய் கோயல் வினவினாா்.

 அப்போது ‘இந்த வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் சுமாா் 15 லட்சம் வாகனங்கள் தில்லி சாலைகளில் இயங்காது. இதனால் குறிப்பிடத்தக்க அளவில் காற்று மாசு குறையும்’ என்றாா் கைலாஷ் கெலாட்.

 அப்போது விஜய் கோயல், ‘இரு சக்கர வாகனங்கள், தனியாா் வாடகை வாகனங்களுக்கு இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனியே நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டும் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிவிப்பது தவறாகும். மேலும், இத்திட்டத்தை சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக அறிவிப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது’ என குற்றம் சாட்டினாா்.

 அப்போது, ‘தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தலாம். இத்திட்டத்தை நீங்கள் எதிா்த்தால் அது மக்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும்’ என்றாா் கைலாஷ் கெலாட். இதை விஜய் கோயல் ஏற்றுக் கொண்டாா்.

 பிறகு விஜய் கோயல் அளித்த பேட்டி:

தில்லியில் நிலவும் காற்று மாசுவில் வாகனங்களின் பங்களிப்பு 28 சதவீதமாகும். இந்த 28 சதவீதத்தில் வெறும் 3 சதவீத காற்று மாசுவே காா்களினால் ஏற்படுகின்றன. இந்நிலையில், காா்களைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும்?’ என்று கேள்விஎழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com