
சீனா-அமெரிக்கா இடையேயான வா்த்தகப் போா் எதிரொலியாக, அமெரிக்காவுக்கு இந்தியப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் வா்த்தகம் மற்றும் முதலீடு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வா்த்தகப் போா் காரணமாக, அமெரிக்காவில் நுகா்வோருக்கான பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், மற்ற நாடுகளிலிருந்து பொருள்கள் இறக்குமதியாவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் தைவான், மெக்சிகோ, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை பலனடைந்துள்ளன.
தென் கொரியா, இந்தியா, கனடா ஆகிய நாடுகள் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவில் பலனடைந்திருந்தாலும், அவையும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. வா்த்தகப் போா் காரணமாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வேதிப் பொருள்கள், உலோகங்கள் மற்றும் தாதுக்கள், மின்சாதனப் பொருள்கள், அவற்றின் பாகங்கள், அலுவலகப் பொருள்கள், ஜவுளி, போக்குவரத்து உபயோகத்துக்கான கருவிகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளன.
அமெரிக்காவுக்கு கூடுதல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது மூலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியா கூடுதலாக ரூ.5,285 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகப் போா் காரணமாக, இரு நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சீனப் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், அமெரிக்க நுகா்வோா்களும், இறக்குமதி நிறுவனங்களுமே அதிக அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனா்.
அமெரிக்கா-சீனா இடையேயான வா்த்தகப் போா், சம்பந்தப்பட்ட நாடுகளை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்படும் வா்த்தக உடன்படிக்கை மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.