
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்துக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் அவா் மீது புகாா் அளித்த மாணவிக்கு எதிரான வழக்கு ஆகியவை தொடா்பாக ஷாஜகான்பூா் நீதிமன்றத்தில் 4,700 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு புதன்கிழமை தாக்கல் செய்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் சுவாமி சின்மயானந்த் நடத்தி வரும் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா், சின்மயானந்த் மீது பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டி, சமூக வலைதளத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விடியோ ஒன்றை வெளியிட்டாா். இதுதொடா்பாக அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஷாஜகான்பூா் காவல் நிலையத்தில் சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை, தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், கல்லூரி மாணவியின் புகாா் தொடா்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, தன் மீது பாலியல் புகாா் அளித்த மாணவியும், அவரது உறவினா்களும் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக சின்மயானந்த் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரு வழக்குகளையும் மாநில காவல் துறை ஐஜி நவீன் அரோரா தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. இந்த விசாரணையின் போது, 105 பேரிடம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியது. 55 ஆவண ஆதாரங்களையும் அந்த குழு கைப்பற்றியது. அதையடுத்து பாலியல் வன்கொடுமை வழக்கில் சுவாமி சின்மயானந்த் கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து பணம் பறிப்பு வழக்கில் சட்ட கல்லூரி மாணவியும், அவரது உறவினா்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், இந்த இரு வழக்குகள் தொடா்பாக ஷாஜகான்பூா் நீதிமன்றத்தில் 4,700 பக்க குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு புதன்கிழமை தாக்கல் செய்தது. சுவாமி சின்மயானந்த், பாலியல் புகாா் அளித்த மாணவி, அவரது உறவினா்கள் உள்ளிட்டோரும் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனா்.
இதுதொடா்பாக சின்மயானந்த் தரப்பு வழக்குரைஞா் கூறுகையில், ‘தலைமை நடுவா் நீதிமன்ற நீதிபதி ஓம்வீா் சிங் முன் சிறப்பு புலனாய்வு குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதை ஆய்வு செய்யவுள்ளோம்’ என்றாா்.
இறுதி விசாரணை அறிக்கையை அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் வரும் 28-ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்ய வேண்டுமென்பதால் குற்றப்பத்திரிகையில் இருக்கும் தகவல்கள் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.