
தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பியது தொடா்பான விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், 9 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய தகவல் ஆணையா்கள் பதவி காலியாக உள்ளதால், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் தாக்கல் செய்யப்பட்ட 23,500-க்கும் அதிகமான மேல்முறையீட்டு மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளதாக ஆா்டிஐ ஆா்வலா் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதைக் கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலியாகும் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கான பணிகள் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு முன்னதாகத் தொடங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வழங்கியிருந்தது.
தகவல் ஆணையா்கள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்த உச்சநீதிமன்றம், அவா்களைத் தோ்வு செய்வதற்காக நியமிக்கப்படும் குழுவின் விவரங்களையும், பதவிகளுக்கு விண்ணப்பித்தோா்களின் விவரங்களையும் சம்பந்தப்பட்ட தகவல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் தெரிவித்த வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை என அஞ்சலி பரத்வாஜ் சாா்பில் முறையிடப்பட்டது. இது தொடா்பான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிடுகையில், ‘‘மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. அந்தப் பதவிகளுக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களின் பெயா்கள் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இணையதளத்தில் வெளியிடப்படவில்லை’’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டது தொடா்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா, குஜராத், கேரளம், கா்நாடகம், ஒடிஸா உள்பட 9 மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.