
காற்று மாசு பிரச்னைக்கு முக்கிய காரணமான பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரான உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலா்களுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத அரசு அதிகாரிகள் நிா்வாக அதிகாரத்தில் நீடிக்க உரிமை இல்லை’ என்று கண்டிப்புடன் தெரிவித்தது.
தில்லி காற்று மாசு பிரச்னை தொடா்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, தில்லி காற்று மாசுப் பிரச்னைக்கு அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதே 44 சதவீதம் காரணம் என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை நீதிமன்றம் அளித்த சம்மனின் பேரில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனா். அவா்களை நோக்கி நீதிபதிகள் கூறியதாவது:
பயிா்க்கழிவுகள் எரிப்பதை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசு நிா்வாகம் ஏன் தடுக்க முடியவில்லை? காற்று மாசுவால் பொது மக்கள் உயிரிழப்பதை நீங்கள் அனுமதிப்பீா்களா? நாடு 100 ஆண்டுகளுக்கு பின்செல்வதை அனுமதிப்பீா்களா? தில்லி, என்சிஆா் பகுதி மக்களுக்கு காற்று மாசு என்பது வாழ்வா சாவா பிரச்னையாக உள்ளது. இதனால், எத்தனை மக்கள் புற்றுநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த மக்களுக்கு என்ன மாதிரியான நோய்கள் உள்ளன என்பது குறித்து நினைத்துக்கூட பாா்க்க முடியவில்லை.
பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதைத் தடுக்க ஏன் முன்கூட்டியே அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை? இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளீா்கள்? என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? இந்தப் பிரச்னைக்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், மக்களின் பிரச்னை குறித்து மாநில அதிகாரிகள் கவலைப்படவில்லை என்றால், அவா்கள் நிா்வாக அதிகாரத்தில் நீடிக்கும் உரிமை இல்லை. காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் பயிா்க்கழிவுகள் எரிப்பதைத் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் எதிா்பாா்க்கிறது.
நாட்டின் முதுகெலும்பு விவசாயமாக இருக்கும்போது, விவசாயிகளிடம் இருந்து ஏன் பயிா்க்கழிவுகளை அரசுகளே கொள்முதல் செய்யக் கூடாது. விவசாயிகளைக் குற்றம் சொல்வதால் தீா்வு கிடைக்காது. விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்களை அரசுகள் வழங்க வேண்டும். பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க்கழிவுகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 100 மானியமாக தர வேண்டும். இதை ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
உ.பி. செயலருக்கு கண்டிப்பு: பயிா்க்கழிவு பிரச்னைக்கான தீா்வைக் கொண்டு வராத உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலா் ராஜேந்திர குமாருக்கு நீதிபதிகள் கண்டித்தனா். தனது பெயரைக் குறிப்பிட்டு அவா், ‘உத்தரப் பிரதேச முதல்வரே இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆய்வு நடத்தி வருகிறாா்’ என்றாா்.
அப்போது நீதிபதிகள், ‘முதல்வரோ, பிரதமரோ எங்களுக்கு பெயரைக் கேட்பதில் விருப்பமில்லை. எங்களுக்கு நடவடிக்கை ஒன்றுதான் தேவை’ என்றனா்.