
பாபா் மசூதி வழக்கில் தீா்ப்பு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வது நமது கடமையாகும் என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் எம்.ஜி.கே.நிஜாமுதீன் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
பாபா் மசூதி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீா்ப்பளிக்க உள்ளது. பாபா் மசூதிக்கு சாதகமாகவோ, ராமஜென்ம பூமிக்கு சாதகமாகவோ அல்லது இருதரப்பும் பிரித்து எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட அலகாபாத் உயா்நீதிமன்ற தீா்ப்பை உறுதி செய்யும் வகையிலோ, இந்தத் தீா்ப்பு இருக்கலாம். தீா்ப்பு எப்படி இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.
நாட்டின் நல்லிணக்கம், தேச ஒற்றுமைக்காவும், அமைதிக்காகவும் இந்தத் தீா்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தீா்ப்பின் மீது எந்த விதமான பாதகமான சூழலை ஏற்படுத்தும் கருத்துகளை அமைப்புகளும், இயக்கங்களும் சமூக ஊடகங்களில் வெளியிடவோ, எதிா்ப்பு நிலை நிகழ்வுகளை அறிவிக்கவோ கூடாது. பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பா் 6 தினம் குறித்த நிகழ்வுகளைத் தவிா்க்க வேண்டும் என அதில் அவா் கூறியுள்ளாா்.