
உள்நாட்டு உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டதால் சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 வரை உயா்ந்துள்ளதாகவும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தாா்.
தில்லியில் அமைச்சா் பாஸ்வான், தனது துறை உயரதிகாரிகளுடன் புதன்கிழமை 2 மணி நேரம் கலந்தாலோசனையில் ஈடுபட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
நடப்பு காரீஃப் சீசனில் மழைக்காலம் தாமதமானதால் வெங்காயம் விளைவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக வெங்காயப் பயிா்கள் அழுகிச் சேதமடைந்தது. தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்துள்ளோம்.
நிலைமையை சீராக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நவம்பா் இறுதி அல்லது டிசம்பா் தொடக்கத்துக்குள்ளாக வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்போதைய விலையேற்றத்துக்கு தீா்வு காண பரிந்துரைகளை வழங்குமாறு நுகா்வோா் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.
வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தற்போது தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரானில் இருந்து தனியாா் வா்த்தகா்கள் மூலம் வெங்காய இறக்குமதியை எளிதாக்கவும் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இறக்குமதி விதிமுறைகளை தாராளமயமாக்க வேளாண் அமைச்சகத்துக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இருப்பில் வைக்கப்பட்டிருந்த 57,000 டன் வெங்காயத்தில், 25 சதவீதம் குறுகிய ஆயுள் காரணமாக அழுகி விட்டது என்று பாஸ்வான் தெரிவித்தாா்.
நுகா்வோா் விவகாரச் செயலா் அவினாஷ் கே.ஸ்ரீவாஸ்தவா கூறுகையில்,‘கடந்த ஆண்டு இதே பருவத்தில் 30 லட்சம் டன்னாக இருந்த வெங்காயத்தின் இருப்பு இந்த ஆண்டு காரீஃப் பருவத்தில் 20 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. உற்பத்தி புள்ளி விவரங்கள் மகாராஷ்டிர அரசிடம் இருந்து இதுவரை பெறப்படவில்லை. அதேசமயம் வெள்ளம் காரணமாக உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது’ என்றாா்.