50 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த பஞ்சாப் - ஹரியாணா! ஏன் தெரியுமா?

சீக்கிய மத நிறுவனர் குரு நானக் தேவின் 550வது பிறந்தநாள் வருகிற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப்  மற்றும் ஹரியாணா மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. 
50 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த பஞ்சாப் - ஹரியாணா! ஏன் தெரியுமா?

சீக்கிய மத நிறுவனர் குருநானக் தேவின் 550வது பிறந்தநாள் வருகிற நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில சிறப்பு சட்டசபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

நிர்வாகக் காரணங்களுக்காக பஞ்சாபில் இருந்து ஹரியாணா மாநிலம் நவம்பர் 1, 1966 அன்று பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 50 ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள் இணைந்த சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இடம்பெற்றுள்ளனர். இரு மாநில எம்.எல்.ஏக்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.

பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் ராணா கே.பி.சிங் அனைவரையும் வரவேற்றார். இரண்டு மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடங்களும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹரியாணா எம்.எல்.ஏக்கள், பஞ்சாப் சட்டசபைக் கட்டிடத்திற்கு நடந்து சென்றனர். இரு மாநில எம்.எல்.ஏக்களும் கலந்து ஒன்றாக அமர்ந்திருந்தனர்.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் படேலுக்கு அடுத்தபடியாக ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதலா அமர்ந்திருந்தார்.  காங்கிரஸ் தலைவர் கிரண் சவுத்ரிக்கு அடுத்ததாக  ஹரியாணாவின் பாஜக மூத்த தலைவர் அனில் விஜ் அமர்ந்திருந்தார். பஞ்சாப் மூத்த காங்கிரஸ் தலைவர் ரசியா சுல்தானா, ஹரியாணா பெண் எம்.எல்.ஏக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 

மேலும், அமர்வு தொடங்குவதற்கு முன்பாக,  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் & ஹரியாணா கவர்னர் மற்றும் சண்டிகர் வி.பி.சிங் ஒன்றாக சட்டசபைக்கு வந்தனர்.  'இந்த நிகழ்வைக் கொண்டாடும் அதிர்ஷ்டம் நமக்கு ஏற்பட்டுள்ளதில் மகிழ்ச்சி' என்று  சபாநாயகர் ராணா கே.பி.சிங் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் மேலும், கர்தார்பூர் நடைபாதையைத் திறப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பேசுகையில், இன்று இங்கு காணப்படும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு, இரு மாநில சட்டசபை கூட்டம் ஒன்றாக நடைபெற்றது வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. 

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு:

சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்துள்ளன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பர் 12-இல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் இருதரப்பிலும் முறைப்படி நவம்பர் 9-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com