மகாராஷ்டிராவில் முடிவுக்கு வருமா இழுபறி? ஆளுநருடன் பாஜக குழு சந்திப்பு!

மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையிலான குழு இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் பாஜக குழு
ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் பாஜக குழு


மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையிலான குழு இன்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட பாஜக மற்றும் சிவசேனை கட்சிகள் முறையே 105 மற்றும் 56 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், 'ஆட்சியில் சமபங்கு' மற்றும் 'சுழற்சி முறையில் முதல்வர் பதவி' என்கிற சிவசேனையின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. இதனால், அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாள்கள் ஆகியும், இன்னும் அரசு அமைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

அடுத்த 5 ஆண்டுக்கு பாஜக தரப்பில் இருந்துதான் முதல்வர் என்பதில் பாஜக திட்டவட்டமாக இருக்கிறது. அதேசமயம், பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவியைக் குறித்து மட்டுமே இருக்கும் என சிவசேனையும் தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதனால், நாளுக்கு நாள் அங்கு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

இதனிடையே, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் ஆயுள்காலம் வரும் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அதற்குள் அங்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையிலான குழு இன்று அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்தித்து மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த சந்திப்புக்குப் பிறகு சந்திரகாந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

"மகாராஷ்டிர மக்கள் மெகா கூட்டணிக்கே அதிகாரம் வழங்கியுள்ளனர். அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் இன்று ஆளுநரைச் சந்தித்து சட்ட ரீதியிலான வாய்ப்புகள் மற்றும் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினோம்" என்றார்.

இந்தக் குழுவில் கிரிஷ் மகாஜன், சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார் மற்றும் ஆஷிஷ் ஷேலார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தனிப்பெரும் கட்சி பாஜக:

நவம்பர் 9-ஆம் தேதியுடன் மகாராஷ்டிர பேரவையின் ஆயுள்காலம் நிறைவடையவுள்ளதால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக அதற்குமுன் ஆட்சி அமைக்க உரிமை கோரி அரசை அமைக்கலாம். அதன்பிறகு, சிவசேனையுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com