'எல்லா வாய்ப்புகளும் தயாராக உள்ளது' என்ற உத்தவ் தாக்கரேவின் பேச்சால் அதிர்ச்சி: மனம் திறந்த தேவேந்திர ஃபட்னவீஸ்

'எல்லா வாய்ப்புகளும் தயாராக உள்ளது' என்ற உத்தவ் தாக்கரேவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்ததாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
தேவேந்திர ஃபட்னவீஸ்
தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: 'எல்லா வாய்ப்புகளும் தயாராக உள்ளது' என்ற உத்தவ் தாக்கரேவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்ததாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இத்தனை நாட்களாகியும் ஆட்சியமைப்பதில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனை இடையே முதல்வர் பதவி தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவோடு அதற்கான அவகாசம் முடிவடைவதால் பாஜக ஏதாவது மாற்று வழிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.  பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரான அவர் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பவாரிடம் ஆலோசனை கேட்டதாக' தெரிவித்தார்.    

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளியன்று மாலை ராஜிநாமா செய்தார். மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை, ஆளுநர் மாளிகையில் சந்தித்த அவர் தனது ராஜிநாமா கடிதத்தை  அளித்தார். இதையடுத்து அங்கு என்ன விதமான முடிவை எடுப்பது என்பது குறித்து ஆளுநர் தீர்மானிப்பார் என்று தெரிகிறது. 

இந்நிலையில் 'எல்லா வாய்ப்புகளும் தயாராக உள்ளது' என்ற உத்தவ் தாக்கரேவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்ததாக மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

ராஜிநாமாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:

கடந்த 15 நாட்களில் சிவசேனாவின் அறிக்கைகள் மற்றும் கருத்துகள் எதிர்பாராத ஒன்று  நாங்கள் எதையும் அவர்களிடத்தில் உறுதியளிக்கவில்லை. சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு கால ஆட்சி கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தெல்லாம் பேசுவதற்கு  ஒன்றும் இல்லை. நான் இருக்கும் வரை அது கண்டிப்பாக நடக்காது.

உத்தவ் தாக்கரேவுடன் எனக்கு நெருக்கமான உறவு உள்ளது. அவருடன் தனிப்பட்ட முறையில் பேச நானே முயன்றேன். பலமுறை நான் அவருக்கு போன் அழைப்பு விடுத்தும், அவர் பேச முன்வரவில்லை. எதற்கும் பதிலும் இல்லை. ஆனால், அவர், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருடன் மட்டும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 'எல்லா வாய்ப்புகளும் தயாராக உள்ளது' என்ற உத்தவ் தாக்கரேவின் பேச்சால் அதிர்ச்சி அடைந்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com