பாஜக இல்லைனா என்ன? எங்களுக்கு வேறு வழி இருக்கிறது! - சிவசேனா எம்.பி சூசகம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் என்று இருக்கிறது என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்
பாஜக இல்லைனா என்ன? எங்களுக்கு வேறு வழி இருக்கிறது! - சிவசேனா எம்.பி சூசகம்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவைத் தவிர எங்களுக்கு வேறு வழியும் என்று இருக்கிறது என்று சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பது குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அமைச்சரவையில் ஏற்கனவே கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் தங்களது முடிவுகளில் தீவிரமாக உள்ளன.

இந்நிலையில் நேற்று பாஜக நிர்வாகிகள், மகாராஷ்டிர மாநில ஆளுநரை சந்தித்து பேசினர். அதே நேரத்தில் சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டமும் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, 'பாஜக உடனான உறவை முறித்துக் கொள்ள விரும்பவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எங்களிடம் பாஜக என்ன வாக்குறுதி அளித்ததோ அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அதற்கு ஒப்புக் கொண்டால் பாஜகவுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று கூறியிருந்தார். 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், 'பாஜகவிடம் பெரும்பான்மை எண்ணிக்கை இருந்தால் அதனை அவர்கள் நிரூபித்து ஆட்சி அமைக்கட்டும். ஆளுநரை சந்தித்து விட்டு அவர்கள் ஏன் வெறுங்கையில் திரும்ப வேண்டும். அவர்களிடம் எண்ணிக்கை இருந்திருந்தால் இப்போது ஆட்சி அமைத்து இருக்கலாமே?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், 'மக்களவைத் தேர்தலின் போது கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாஜக நடந்துகொள்ள வேண்டும். பாஜக முதலில் முடிவு எடுக்கட்டும். எங்களுக்கு வேறு வழியும் உள்ளது. அதை இப்போது விளக்கவேண்டிய அவசியம் இல்லை. முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளவேண்டும், அமைச்சர்கள் எண்ணிக்கையும் சமமாக இருக்க வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. பாஜக முடிவு எடுத்த பிறகு, கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார். தற்போது மகாராஷ்டிராவில் இழுபறி நிலை நீடிப்பதற்கு பாஜகவே காரணம். மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வரவேண்டும் என்பதையே பாஜக விரும்புகிறது' என்று பேசினார்.

ஏற்கனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சி நேரடியாகவும், காங்கிரஸ் கட்சி மறைமுகமாகவும் சிவசேனாவை கூட்டணிக்கு அழைக்க முயற்சித்து வருகின்றன. ஆனால், சிவசேனா இதுவரை பாஜகவுடன் கூட்டணியை தொடரவே விரும்புவதாக உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். 

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 9ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்: 

மொத்த இடங்கள்: 288

பாஜக -105

சிவசேனா -56

தேசியவாத காங்கிரஸ் கட்சி - 54

காங்கிரஸ் - 44

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com