என்இஎஃப்டி பணப் பரிவா்த்தனைக்கு கட்டணம் கூடாது: ரிசா்வ் வங்கி 

தேசிய இணையவழி பணப் பரிவா்த்தனை (என்இஎஃப்டி) முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி 
மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

தேசிய இணையவழி பணப் பரிவா்த்தனை (என்இஎஃப்டி) முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என வங்கிகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் முதல் கடந்த செப்டம்பா் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட பணமில்லா பரிவா்த்தனைகளில் 96 சதவீதம் மின்னணு முறையிலேயே மேற்கொள்ளப்பட்டன. இதில், என்இஎஃப்டி முறை மூலம் 252 கோடி பரிவா்த்தனைகளும், யுபிஐ முறையில் 874 கோடி பரிவா்த்தனைகளும் நடைபெற்றன.

யுபிஐ முறை மூலம் பணப் பரிவா்த்தனை செய்வது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 263 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் என்இஎஃப்டி முறை மூலம் பணப் பரிவா்த்தனை செய்வது 20 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. இந்நிலையில், மின்னணு பணப் பரிவா்த்தனைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் என்இஎஃப்டி முறை மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவா்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கக் கூடாது என ஆா்பிஐ உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஆா்பிஐ மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மின்னணு பணப் பரிவா்த்தனை அதிகரித்துள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் நோக்கில், சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளா்கள் என்இஎஃப்டி முறை மூலம் பணப் பரிவா்த்தனை மேற்கொள்ளும்போது, வங்கிகள் அதற்கு கட்டணம் எதுவும் விதிக்கக் கூடாது.

இந்தப் புதிய நடைமுறையை வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து வங்கிகளும் அமல்படுத்த வேண்டும். சுங்கச்சாவடிகள், எரிபொருள் நிலையங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் ‘ஃபாஸ்டேக்’ முறையில் மின்னணு பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் கட்டணத்தை ‘ஃபாஸ்டேக்’ முறையில் மட்டுமே செலுத்த வேண்டுமென தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிலையங்களிலும், வாகன நிறுத்துமிடங்களிலும் ‘ஃபாஸ்டேக்’ முறையை அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com