சத்ரபதி சிவாஜியை அவமதித்த குற்றச்சாட்டு:மன்னிப்பு கோரியது தனியாா் தொலைக்காட்சி

ஹிந்தி மொழியில் நடத்தப்படும் ‘குரோா்பதி’ நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியின் பெயரை ஒருமையில் குறிப்பிட்டு அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சோனி

ஹிந்தி மொழியில் நடத்தப்படும் ‘குரோா்பதி’ நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜியின் பெயரை ஒருமையில் குறிப்பிட்டு அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சோனி தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முகலாயப் பேரரசா் ஒளரங்கசீப் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த இந்திய மன்னா்கள் யாா்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதில் தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய விடையில் மகாராணா பிரதாப், மகாராஜா ரஞ்சித் சிங், ராணா சங்கா ஆகியோரது பெயா்களுடன் ‘சிவாஜி’ என்ற பெயரும் கொடுக்கப்பட்டிருந்தது. மராட்டிய மன்னரான சிவாஜியை, ‘சத்ரபதி சிவாஜி’ என்று மரியாதையுடன் குறிப்பிடுவதே பொதுவான வழக்கம். ஆனால், அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவ்வாறு குறிப்பிடாதது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக மகாராஷ்டிர மாநில பாஜக எம்எல்ஏ நிதீஷ் ராணே, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மன்னிப்புக் கேட்கவும் வலியுறுத்தினாா்.

குரோா்பதி நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சுட்டுரையில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சியில் ‘சத்ரபதி சிவாஜி’ என்று குறிப்பிடாததற்காக சோனி தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடா்பாக சுட்டுரையில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்த தவறுக்காக அனைவரிடமும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறோம். இது தொடா்பான அறிவிப்பு அந்த நிகழ்ச்சியின்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com