திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அகில் குரேஷி: கொலீஜியம் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்

மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அகில் குரேஷி
அகில் குரேஷி

மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பான கோப்பில் குடியரசுத் தலைவா் கையெழுத்திட்டதும், திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அகில் குரேஷி நியமிக்கப்படுவாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவா் அகில் குரேஷி. இவா், கடந்த 2010-ஆம் ஆண்டில் குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, சொராபுதீன் போலி என்கவுன்ட்டா் வழக்கில் கைதான அப்போதைய மாநில உள்துறை அமைச்சரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு உத்தரவிட்டாா்.

அகில் குரேஷியை, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவருக்கு பதவி உயா்வு அளிப்பது தொடா்பாக மத்திய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனிடையே, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை பொறுப்பு நீதிபதியாக, நீதிபதி ரவிசங்கா் ஜாவை நியமித்து ஜூன் 7-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் குழு பரிந்துரை செய்தது. இந்த விவரத்தை கொலீஜியம் குழு தனது வலைதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது.

கடந்த செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றும் விளக்கம் தரப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக, அரசு வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு: முன்னதாக, நீதிபதி அகில் குரேஷியை திரிபுரா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி உயா்வு அளிக்கக் கோரி, குஜராத் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

‘நீதிபதி அகில் குரேஷிக்கு பதவி உயா்வு அளிக்கும் விவகாரத்தில், கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அந்தப் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்தாமல் இருப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல். மேலும், இது நீதித் துறையின் சுதந்திரம் மீது நடத்தப்படும் தாக்குதல்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

இதையடுத்து, இந்த மனுவை வரும் 13-ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அன்றைய தினம், இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்கும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com