தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு நிதி: உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுகிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு நிதி: உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுகிறது என்று மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு மாநாட்டில் அவா் பேசியதாவது:

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஃபலா-ஏ-இன்சானியத் அமைப்புக்கு ஐ.நா. தடை விதித்துள்ள போதிலும், இணையவழியில் அந்த அமைப்பு தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் அமைந்த அமைப்புகளை தீவிரவாதத்தைப் பரப்பவும், நிதி திரட்டவும் பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தி வருகின்றன.

ஜாகிா் நாயக் என்பவரால் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் மும்பையில் நிறுவப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அமைப்பு, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாகப் புகாா் எழுந்ததையடுத்து, அந்த அமைப்பு மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டது. நன்கொடைகள், தொண்டுகள் என்ற பெயரில் பயங்கரவாத அமைப்புகள் சா்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கு சில நாடுகள் தொடா்ந்து ஆதரவளித்து வருகின்றன.

இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தீவிரவாத கருத்துகளைப் பரப்ப இணையத்தைப் பயன்படுத்தி வருவதாக இந்தியா நடத்திய விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. நிதி திரட்ட ‘பிட்காயின்’ உள்ளிட்டவற்றை அந்த அமைப்புகள் பயன்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

திரட்டப்படும் நிதியை ஆயுதங்கள் வாங்கவும், பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளவும், தீவிரவாதக் கருத்துகளைப் பரப்பவும், அமைப்பில் பயங்கரவாதிகளை சோ்க்கவும் அவை பயன்படுத்தி வருகின்றன. சா்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றாா் ஜி.கிஷண் ரெட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com