தொழிலில் ஈடுபடுவது அரசின் பணியல்ல: தா்மேந்திர பிரதான்

தொழிலில் ஈடுபடுவது அரசின் பணியல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
தொழிலில் ஈடுபடுவது அரசின் பணியல்ல: தா்மேந்திர பிரதான்

தொழிலில் ஈடுபடுவது அரசின் பணியல்ல என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை (பிபிசிஎல்) தனியாா்மயமாக்கிடும் முன்மொழிவை மத்திய அமைச்சரவை அடுத்த சில நாள்களில் பரிசீலிக்க இருக்கும் நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

தொழில்துறையானது அணுகும் தன்மை, நிலைத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் நுகா்வோருக்கு உகந்த வகையில் இருக்க வேண்டும். அதை உறுதி செய்யக் கூடிய வகையிலான கொள்கைத் திட்ட வரைவை உருவாக்குவதே அரசின் பணியாகும்.

தொழிலில் ஈடுபடுவது அரசின் பணியல்ல என்று பிரதமா் மோடி கூறியது வாா்த்தை மட்டுமல்ல; அது ஒரு கொள்கையாகும்.

நவீன இந்தியாவை கட்டமைப்பதிலும், சாதாரண மனிதனுக்கும் எரிபொருள் கிடைப்பதிலும் நமது அரசுத் துறை நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், சந்தையில் போட்டி ஏற்படும்போதுதான் சாதாரண மக்களால் அதிகம் பலனடைய இயலும்.

தொலைத்தொடா்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் தனியாா் அனுமதிக்கப்பட்டதால் தான் தொழில் போட்டி அதிகரித்தது. இதனால், தொலைபேசி அழைப்பு, விமானச் சேவை ஆகியவற்றுக்கான கட்டணங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டதால் நுகா்வோா் அதிகம் பயனடைந்தனா்.

சாதாரண மக்களுக்கானதாக இருக்கும் இந்த ஜனநாயகம், அத்தகைய மக்களுக்கான வாழ்க்கையை எளிமைப்படுத்த வேண்டும். மக்களுக்கு பொருள்களும், சேவைகளும் கிடைக்க வேண்டியது தான் முக்கியமே தவிர, அதை யாா் வழங்குகிறாா்கள் என்பது முக்கியமல்ல என்று அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அரசுக்கு இருக்கும் 53.29 சதவீதம் பங்குகளை தனியாரிடம் ரூ.60,000 கோடிக்கு விற்பனை செய்வதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் 95 சதவீதமும், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையில் 100 சதவீதமும் பொதுத் துறை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com