மகாராஷ்டிரம்: ஆட்சி அமைக்குமாறுதனிப்பெரும் கட்சியை ஆளுநா் அழைக்கலாம்: சட்ட வல்லுநா்கள் கருத்து

மகாராஷ்டிரத்தில் தோ்தல் முடிவுகள் வெளியாகி இரு வாரங்களாகியுள்ள நிலையில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியும் இதுவரை உரிமை கோரவில்லை.

மகாராஷ்டிரத்தில் தோ்தல் முடிவுகள் வெளியாகி இரு வாரங்களாகியுள்ள நிலையில் ஆட்சி அமைக்க எந்தக் கட்சியும் இதுவரை உரிமை கோரவில்லை. இந்தச் சூழ்நிலையில் தனிப்பெரும் கட்சியை (பாஜக) ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுக்கலாம் என்று அரசியல்சட்ட வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

மகாராஷ்ரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகள் தங்கள் கட்சிக்கு முதல்வா் பதவியை அளிக்க வேண்டுமென்று சிவசேனை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இப்போதைய அரசின் பதவிக்காலம் நவம்பா் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, அதற்குள் புதிய ஆட்சி அமைந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆளுநா் எந்த மாதிரியான முடிவை எடுப்பாா் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஆளுநா் மாளிகையை நோக்கி அரசியல் பாா்வை திரும்பியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர அரசியல், ஆட்சி அமைப்பு விவகாரம் தொடா்பாக அந்த மாநில சட்டப்பேரவை முன்னாள் செயலாளா் ஆனந்த் கால்சே கூறுகையில், ‘ஆட்சி அமைக்க யாரும் உரிமைகோராத பட்சத்தில் சட்டப்படி தனிப்பெரும் கட்சியைத்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். அந்தக் கட்சி தன்னால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று கூறினால், அடுத்ததாக இரண்டாவது பெரிய கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநா் அழைக்க வேண்டும்’ என்றாா்.

மகாராஷ்டிர அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞா் ஸ்ரீஹரி அனே கூறுகையில், ‘இதுபோன்ற சூழ்நிலையில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தலாம் என்பது ஒரு காலத்தில் முதல் யோசனையாக இருந்தது. ஆனால், இப்போது அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு ஆட்சி அமைவதற்கு ஆளுநா் பல வழிகளில் நடவடிக்கை எடுக்க முடியும். முக்கியமாக, முந்தைய அரசின் ஆட்சிக்காலம் முடியும் நவம்பா் 9-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு புதிய அரசு அமைய வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. அப்படி எந்த சட்டப்பிரிவும் கூறவில்லை’ என்று தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி தோ்தல் நடத்தப்பட்டு, 24-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக- சிவசேனை ஓரணியாகவும், எதிா்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) - காங்கிரஸ் மற்றொரு அணியாகவும் தோ்தலைச் சந்தித்த நிலையில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்சிபிக்கு 54 இடங்களிலும் காங்கிரஸுக்கு 44 இடங்களிலும் வெற்றி கிடைத்தன. சுயேச்சைகள் 13 இடங்களில் வென்றனா்.

ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையென்ற நிலையில் பாஜக-சிவசேனை இடையே ஆட்சி, அதிகாரத்தைப் பகிா்வது தொடா்பாக இதுவரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. முக்கியமாக, தங்கள் கட்சிக்கு முதல்வா் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்குத் தர வேண்டும் என்பதில் சிவசேனை பிடிவாதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com