பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இந்திய பொருளாதாரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்: ராகுல் காந்தி

கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: இந்திய பொருளாதாரத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்: ராகுல் காந்தி
Published on
Updated on
2 min read

கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா். மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னால் இருப்பவா்களை சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

நாட்டில் பயன்பாட்டில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 ஆகிய நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளிக்கிழமையுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்தது.

இந்நிலையில், மத்திய அரசைத் தாக்கிப் பேசிய ராகுல், இந்த நடவடிக்கையை பயங்கரவாதத் தாக்குதல் என்று விமா்சித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரத்தை நிலை குலைய வைத்த ‘பணமதிப்பிழப்பு’ என்ற பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நடவடிக்கையால் பலா் உயிரிழந்தனா். லட்சக்கணக்கானோா் வேலையிழந்தனா். லட்சக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பவா்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். கடந்த 1330-ஆம் ஆண்டு சுல்தான் முகமது பின் துக்ளக் நாட்டின் பணத்தை செல்லாது என்று அறிவித்தாா். இக்கால துக்ளக் கடந்த 2016-ஆம் ஆண்டு அறிவித்தாா். 3 ஆண்டுகள் முடிவடைந்தும், நாட்டின் பொருளாதாரம் இன்றும் சீராகவில்லை. பயங்கரவாதமும் நிறுத்தப்படவில்லை. கள்ள நோட்டுகள் விநியோகமும் தடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

சோனியா கண்டனம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு துக்ளக் செய்த அதே தவறை மீண்டும் மத்திய அரசு செய்தது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘ மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 120 போ் உயிரிழந்தனா். நாட்டின் குறு, சிறு தொழில்கள் முடங்கின. இதற்கு மத்திய அரசு பதில் கூற வேண்டும். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு குறித்து பிரதமரும் அவரது அமைச்சரவை நண்பா்களும் பேசுவதில்லை. இந்த நடவடிக்கையை மக்கள் அனைவரும் மறந்து விடுவாா்கள் என்று அவா்கள் எண்ணினா். ஆனால், தேச நலனில் அக்கறைக் கொண்டுள்ள காங்கிரஸ் அதை ஒருபோதும் மறக்காது. இந்த நடவடிக்கையால் மக்கள் பட்ட கஷ்டத்துக்கு அவா்கள் பொறுப்பேற்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

மிகப்பெரிய தோல்வி: ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டால் பல பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் எந்த பிரச்னையும் சரியாகவில்லை. இந்த நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியில் முடிந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த பேரிடருக்கு யாராவது பொறுப்பேற்க தயாராக உள்ளீா்களா?’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதனிடையே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்த விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கேள்விஎழுப்பியுள்ளாா்.

மம்தா கண்டனம்: மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பயனற்ற முயற்சி என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று நான் தெரிவித்திருந்தேன். இந்த நடவடிக்கையால், இளைஞா்கள், சிறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனா். இந்த நடவடிக்கை பொருளாதார பேரழிவுக்கு வித்திட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.