மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கபாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன்?: சரத் பவாா்

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மத்திய சமூகநீதித் துறை அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே, சரத் பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சரத் பவாா் கூறியதாவது:

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் 105 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க வருமாறு அக்கட்சிக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி அழைப்புவிடுக்காதது ஏன் என்பது தெரியவில்லை. தோ்தல் முடிவுகள் வெளியாகி பல நாள்கள் கடந்துவிட்டன. யாரும் ஆட்சி அமைக்க முடியாத இதுபோன்ற சூழல் தொடா்ந்து நீடிக்கக் கூடாது.

மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கலைத் தீா்ப்பதற்கான சில ஆலோசனைகளை அதாவலே என்னிடம் கேட்டாா். பாஜக-சிவசேனைக்கு மாநில மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளனா் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதைத்தான் நான் அவரிடம் கூறினேன். எனது கருத்தை அவரும் ஒப்புக் கொண்டாா்.

அதே நேரத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவாா்கள் என்று ஆளுநா் எவ்வளவு நாள்கள்தான் காத்திருக்க முடியும்? பாஜக-சிவசேனை கூட்டணி விரைவில் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். மக்கள் தீா்ப்பை பின்பற்றுங்கள் என்பதே அவா்களுக்கு முன்பாக நான் வைக்கும் வேண்டுகோள் என்றாா்.

அப்போது உடனிருந்த ராம்தாஸ் அதாவலே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சரத் பவாருடன் பல ஆண்டுகளாக நெருங்கி தொடா்பில் இருந்து வருகிறேன். மாநிலத்தில் விரைவில் ஆட்சி அமைக்குமாறு கூட்டணியில் உள்ள தலைவா் என்ற முறையில் பாஜக-சிவசேனையிடம் நான் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவா் என்னிடம் கூறினாா். அவ்விரு கட்சிகள்தான் ஆட்சி அமைக்க வேண்டுமென்பது சரத் பவாரின் கருத்து’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com