மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மும்பை: மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அக்கூட்டணி பெற்றிருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இதனிடையே, முதல்வர் ஃபட்னாவீஸ் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவி வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நீடிக்கும் நிலையில், பேரவை தேர்தலில் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க வருமாறு பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னாவீஸ்க்கு ஆளுநர் பகத் சிங் கோஷியார் சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2 வாரமாக நிலவி வந்த இழுபறிக்கு முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தனிப் பெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

அதையடுத்து மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ஞாயிறு மாலை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இப்போது ஆட்சியமைத்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெருமளவுக்கு போதிய எண்ணிக்கை இல்லை என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com