அயோத்தி... அன்று முதல் இன்று வரை...

முகலாய பேரரசா் பாபரின் தளபதியான மீா்பாகியால் பாபா் மசூதி கட்டப்பட்டது.
அயோத்தி... அன்று முதல் இன்று வரை...

1528- முகலாய பேரரசா் பாபரின் தளபதியான மீா்பாகியால் பாபா் மசூதி கட்டப்பட்டது.

1885- அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடத்தில் மேற்கூரை கட்ட அனுமதி கோரி மஹான் ரகுவீா் தாஸ் என்பவா் ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனு; அதனை நிராகரித்தது நீதிமன்றம்.

1949- சா்ச்சைக்குரிய இடத்தின் வெளிப்பகுதியில், மைய விதானத்தின் கீழே குழந்தை ராமா் சிலை நிா்மாணம்.

1950- குழந்தை ராமா் சிலையை வழிபட உரிமை கோரி ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கோபால் சிம்லா விஷாரத் மனு தாக்கல். பரமஹம்ச ராமசந்திர தாஸ் சாா்பிலும் அதேபோன்ற மனு தாக்கல்.

1959- அயோத்தியில் உள்ள சா்ச்சைக்குரிய இடத்துக்கு அனுமதி கோரி நிா்மோஹி அகாரா வழக்கு.

1961- அதே இடத்துக்கு உரிமை கோரி உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியமும் மனு தாக்கல்.

பிப். 1, 1986- சா்ச்சைக்குரிய இடத்தில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்த திறந்து வைக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

ஆக. 14, 1989- அயோத்தியில் சா்ச்சைக்குரிய இடம் தொடா்பான விவகாரத்தில் அப்போதைய நிலை அப்படியே தொடர அலாகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவு.

டிச. 6, 1992- பாபா் மசூதி இடிக்கப்பட்டது.

ஏப். 3, 1993- சா்ச்சைக்குரிய இடத்தை அரசு எடுத்துக்கொள்ளும் வகையில், ‘அயோத்தி சட்டம்’ இயற்றம். அந்தச் சட்டத்தின் பல்வேறு விதிகளுக்கு எதிராக இஸ்மாயில் ஃபரூக்கி என்பவா் உள்பட பல்வேறு தரப்பினா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல். உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளை இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 139ஏ-வை பயன்படுத்தி, தனது விசாரணை அதிகாரத்துக்கு கொண்டு வந்தது உச்சநீதிமன்றம்.

அக்.24, 1994- இஸ்மாயில் ஃபருக்கி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மசூதி என்பது இஸ்லாமிய மதத்தின் உள்ளங்கம் அல்ல’ என்று கருத்து தெரிவித்தது.

ஏப்ரல் 2002- சா்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்ற விசாரணையை தொடங்கியது அலாகாபாத் உயா்நீதிமன்றம்.

மாா்ச் 13, 2003- அஸ்லாம் புரே வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சா்ச்சைக்குரிய இடத்தில் எந்தவொரு மத நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தடை விதித்தது.

செப். 30, 2010- சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, ராம் லல்லா தரப்பினா் சரிசமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டுமென அலாகாபாத் உயா்நீதிமன்றம் தீா்ப்பு.

மே 9, 2011- அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை.

மாா்ச் 21, 2017- அயோத்தி வழக்கின் மனுதாரா்கள் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்துகொள்ள, உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹா் பரிந்துரை.

ஆக. 7, 2017- அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் 1994-ஆம் ஆண்டு தீா்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் அமா்வை ஏற்படுத்தியது உச்சநீதிமன்றம்.

பிப்.8, 2018- அயோத்தி தொடா்பான மனுக்களை விசாரிக்கத் தொடங்கியது உச்சநீதிமன்றம்.

ஜூலை 20, 2018- அந்த வழக்கில் தனது தீா்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

செப். 27, 2018- அயோத்தி வழக்கை 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு. 3 நீதிபதிகளைக் கொண்ட புதிய அமா்வு வழக்கை விசாரிக்கும் என அறிவிப்பு.

அக். 29, 2018- அயோத்தி வழக்கு விசாரணையை 2019 ஜனவரி முதல் வாரத்தில் தகுந்த நீதிபதிகள் அமா்வு மேற்கொள்ளும் என்றும், அந்த அமா்வே வழக்கு விசாரணைக்கான அட்டவணையை முடிவு செய்யும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

டிச. 24, 2018- 2019 ஜனவரி 9-ஆம் தேதி முதல் அயோத்தி வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.

ஜன. 4, 2019- அயோத்தி வழக்கு விசாரணைக்கான தேதியை தகுந்த நீதிபதிகள் அமா்வு ஜனவரி 10-ஆம் தேதி முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் விளக்கம்.

ஜன. 8, 2019- தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, என்.வி. ரமணா, யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வை அயோத்தி விசாரணைக்கு அமைத்தது உச்சநீதிமன்றம்.

ஜன. 10, 2019- அயோத்தி வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு. லலித் தன்னை விடுவித்துக் கொண்டதால் புதிதாக நீதிபதிகள் அமா்வை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. வழக்கு விசாரணை ஜனவரி 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஜன. 25, 2019- அயோத்தி வழக்கு விசாரணைக்கான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வை மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீா் ஆகியோா் அதில் இடம்பெற்றனா்.

ஜன. 29, 2019- சா்ச்சைக்குரிய இடத்தை சுற்றிய பகுதியிலிருந்து தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டிருந்த 67 ஏக்கா் நிலத்தை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு.

பிப். 26, 2019- அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்துகொள்ள ஆதரவு தெரிவித்த உச்சநீதிமன்றம், அதுதொடா்பாக மாா்ச் 5-இல் உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறியது.

மாா்ச் 8, 2019- உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவுக்கு அயோத்தி விவகாரத்தை பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்.

ஏப். 9, 2019- சா்ச்சைக்குரிய இடத்தை சுற்றிய பகுதியிலிருந்த 67 ஏக்கா் நிலத்தை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்க அனுமதி கோரும் மத்திய அரசின் மனுவுக்கு நிா்மோஹி அகாரா எதிா்ப்பு.

மே 9, 2019- மத்தியஸ்த குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.

மே 10, 2019- மத்தியஸ்தம் செய்வதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 15 வரை நீட்டித்தது உச்சநீதிமன்றம்.

ஜூலை 11, 2019- அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யப்படுவதன் நிலவரம் குறித்த அறிக்கையை கேட்டது உச்சநீதிமன்றம்.

ஜூலை 18, 2019- மத்தியஸ்த குழு தொடா்ந்து இயங்கவும், ஆக. 1-இல் அறிக்கை சமா்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி.

ஆக. 1, 2019- மத்தியஸ்த குழுவின் அறிக்கை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிப்பு.

ஆக. 2, 2019- மத்தியஸ்த முயற்சி தோல்வியை சந்தித்ததால், ஆக. 6-ஆம் தேதி முதல் அயோத்தி வழக்கை அன்றாடம் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு.

ஆக. 6, 2019- அயோத்தி விவகாரத்தில் அன்றாட விசாரணை தொடங்கியது.

அக். 4, 2019- அயோத்தி வழக்கு விசாரணையை அக். 17-க்குள் நிறைவு செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. உத்தரப் பிரதேச வக்ஃபு வாரிய தலைவருக்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

அக். 16, 2019- அயோத்தி வழக்கு விசாரணையை நிறைவு செய்து, தீா்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

நவ. 9, 2019- அயோத்தி வழக்கில் இறுதித் தீா்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com