அயோத்தி வழக்கு தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவு: 5 பேர் மீது நடவடிக்கை

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகவும், தவறான தகவல்களை பரப்ப முயன்றதாகவும்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டதாகவும், தவறான தகவல்களை பரப்ப முயன்றதாகவும் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதையொட்டி, நாட்டில் எவ்வித வன்முறை சம்பவங்களும் நிகழாமல் இருக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
 சமூக வலைதள கருத்துகள் மூலம் எவ்வித பிரச்னையும் உருவாகி விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட்டன.
 அதன் மூலம், ராஜஸ்தானின் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் என்பவர் அயோத்தி வழக்கு குறித்து முகநூலில் வெள்ளிக்கிழமை இரவு சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது தெரிய வந்தது. அதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 வழக்குப் பதிவு: கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தங்களது முக நூல் கணக்குகளில் அயோத்தி வழக்கு குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து பதிவிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 அந்த கருத்துகள் இனக் கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததால் மாநில இணையவழி குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸார் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.
 தடுப்புக் காவல்: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அயோத்தி வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "காவல் துறை அவசர எண்ணுக்கு அழைத்து, குறிப்பிட்ட இடத்தில் அயோத்தி பிரச்னை காரணமாக வன்முறை நிகழ்வதாக தகவல் தெரிவித்தனர்.
 ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னர் கண்டறியப்பட்டது. அதையடுத்து அவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்' என்றனர்.
 இணையச் சேவை துண்டிப்பு: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகரில் சனிக்கிழமை இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.
 இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், " சமூக வலைதள கருத்துகள் மூலம் பிரச்னைகள் உருவாவதை தடுக்கும் வகையில் அலிகரில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டது.
 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com