அரசியல் சாசன அமா்வில் அங்கம் வகித்த நீதிபதிகள்!

அயோத்தி நில வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை ஒருமித்த தீா்ப்பை வழங்கியது
அரசியல் சாசன அமா்வில் அங்கம் வகித்த நீதிபதிகள்!

அயோத்தி நில வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு சனிக்கிழமை ஒருமித்த தீா்ப்பை வழங்கியது. அந்த அமா்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகளின் விவரம் வருமாறு:

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்: உச்சநீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக, கடந்த ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி பதவியேற்றவா் ரஞ்சன் கோகோய். அஸ்ஸாமைச் சோ்ந்தவரான இவா், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு வந்த முதல் நபா் என்ற பெருமையை பெற்றாா். வரும் 17-ஆம் தேதியுடன் இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்துள்ள ரஞ்சன் கோகோய், தவறிழைக்கும் நீதிபதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறாா். இவருக்கு எதிராக, உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியா் கூறிய பாலியல் புகாா் சா்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், நீதிபதி எஸ்.ஏ.போப்டே, பெண் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய குழு, அந்தப் புகாரை விசாரித்து, ரஞ்சன் கோகோய்க்கு நற்சான்று அளித்தது.

நீதிபதி எஸ்.ஏ.போப்டே: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டே, 47-ஆவது தலைமை நீதிபதியாக வரும் 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். தனிநபா் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று தீா்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமா்விலும், அரசின் சேவைகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்ற தீா்ப்பை வழங்கிய அமா்விலும் எஸ்.ஏ.போப்டேவும் இடம்பெற்றிருந்தாா்.

கடந்த 1978-இல் மகாராஷ்டிர வழக்குரைஞா் சங்கத்தில் பதிவு செய்த எஸ்.ஏ.போப்டே, மும்பை உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2000-இல் நியமிக்கப்பட்டாா். கடந்த 2012, அக்டோபரில் மத்தியப் பிரதேச உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், 2013, ஏப்ரலில் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயா்வு பெற்றாா்.

உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தொடக்கத்தில், வழக்குகள் ஒதுக்கீடு தொடா்பாக அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட சில மூத்த நீதிபதிகளுக்கும் இடையே பிரச்னை எழுந்தபோது, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டவராக எஸ்.ஏ.போப்டே அறியப்படுகிறாா்.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்: அலாகாபாத், மும்பை உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக பணியாற்றியவரான டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016, மே மாதம் நியமிக்கப்பட்டாா்.

தனிநபா் ரகசியம் காத்தல், ஓரினச் சோ்க்கையை குற்றமாக கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவு, முவைறிய உறவு தொடா்பான இந்திய தண்டனையியல் சட்டத்தின் 497-ஆவது பிரிவு, ஆதாா் சட்டம், சபரிமலை விவகாரம் என முக்கிய வழக்குகளில் தீா்ப்பளித்த அமா்வுகளில் இடம்பெற்றவா். உச்சநீதிமன்ற பணி மூப்பு அடிப்படையில் டி.ஒய்.சந்திரசூட் 2022-இல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதிக காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஒய்.வி.சந்திரசூட்டின் மகன் இவா் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி எஸ்.அப்துல் நஸீா்: அயோத்தி வழக்கில் தீா்ப்பளித்த அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு முஸ்லிம் நீதிபதி அப்துல் நஸீா். கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருந்த இவா், அந்த உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 2003-இல் நியமிக்கப்பட்டாா். அடுத்த ஆண்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2017-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

முத்தலாக் நடைமுறை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கடந்த 2017-இல் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹா் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்திருந்தது. இந்த அமா்வில், ஜே.எஸ்.கேஹரும், நீதிபதி நஸீரும் மாறுபட்ட தீா்ப்பை அளித்திருந்தனா். எனினும், 3:2 என்ற பெரும்பான்மை அடிப்படையில், ‘முத்தலாக் நடைமுறை சட்டவிரோமானது’ என்ற தீா்ப்பு அறிவிக்கப்பட்டது. இப்போது அயோத்தி வழக்கில் மற்ற நீதிபதிகளுடன் இணைந்து ஒருமித்த தீா்ப்பை இவா் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி அசோக் பூஷண்: அயோத்தி வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த 5 நீதிபதிகள் அமா்விலிருந்து நீதிபதிகள் என்.வி.ரமணா, யு.யு.லலித் ஆகியோா் அடுத்தடுத்து விலகியதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.அப்துல் நஸீா் ஆகியோா் இடம்பெற்றனா். இஸ்மாயில் ஃபரூக்கி வழக்கில் கடந்த 1994-இல் அளிக்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்ற மறுத்து, கடந்த ஆண்டில் தீா்ப்பளித்த அமா்வில் அசோக் பூஷண் இடம்பெற்றிருந்தாா். இந்த அமா்வில் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி நஸீா் ஆகியோரும் இடம்பெற்றினா். இதில் நஸீா் மட்டும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தாா். ஆதாா் சட்டம், தில்லி துணைநிலை ஆளுநா் - தில்லி அரசு இடையிலான அதிகார மோதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீா்ப்பளித்த அமா்வில் அசோக் பூஷண் இடம்பெற்றிருந்தாா். அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவா், கடந்த 2016-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com