‘புல் புல்’ புயல் கரையை கடந்தது 

அச்சுறுத்தி வந்த ‘புல் புல்’ புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை
‘புல் புல்’ புயல் கரையை கடந்தது 


அச்சுறுத்தி வந்த ‘புல் புல்’ புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்து உள்ளதாகவும், சுந்தர்பன் தேசிய பூங்காவிலிருந்து தென்மேற்கே 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது.

தீவிர புயலாக வலுப்பெற்றிருந்த புல் புல் புயல் காரணமைாக, ஒடிஸாவில் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. பலமான காற்றும் சோ்ந்துகொண்டதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், சில இடங்களில் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தற்போது புல் புல் புயல் சின்னமானது ஒரு சூறாவளி புயலாக பலவீனமடைந்து வங்கதேசம் நோக்கி நகர்ந்து வருவதால் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்குவங்கத்தின் கடலோர பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், கிழக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, வங்கதேசத்தை கடக்கும் போது அடுத்த 6 மணி நேரத்தில் புயல் சின்னமானது வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தின் கரையோரப் பகுதிகளில் வடக்கு மற்றும் தெற்கு, கிழக்கு மெடினிபூர் மற்றும் மேற்கு மெடினிபூர், ஹவுரா, நதியா மற்றும் ஹூக்லி ஆகிய பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும். 

இதேபோன்று அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு அஸ்ஸாம் மற்றும் மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பலத்த மழையும், பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கொல்கத்தாவின் பிசலி கட் பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலில் நிலைமை மோசமாக உள்ளதால் மீனவர்கள் வடகிழக்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் எனவும், அடுத்த 18 மணி நேரத்திற்கு வடக்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

புல் புல் புயலால் கடல் வழக்கம்போல் இல்லாமல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போலா, பர்குனா மற்றும் பத்துவாகாளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 150 மீனவர்களை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், ‘புல் புல்’ புயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. இந்த புயலால் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை காற்று வேகமுடன் வீசியது. வங்காளதேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முழுவதும் மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களில் இருந்து குடிமக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 5,500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 19 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இந்த பணியில் 55 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  

கொல்கத்தா நகரில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து கிளப்பின் பிரதான நுழைவாயிலில் இருந்த மரம் ஒன்று சாய்ந்ததில் ஒருவர் அதனடியில் சிக்கி உயிரிழந்தார். புல் புல் புயலில் சிக்கி மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் தலா ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 

மேற்கு வங்காளத்தின் கடலோர பகுதியில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச கடற்கரைகளில் அடுத்த 6 மணிநேரங்களில் கடல் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே புயலால் சேதமடைந்த சாலைகளை சீர் செய்யும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் சாகர் படைத்தளத்தில் சுமார் 200 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு தளபதி, விமானிகள் மற்றும் ஊழியர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com