மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராதது ஏன்? சிவசேனை

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராதது ஏன் என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராதது ஏன் என்று சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. இவ்விரு கட்சிகளின் கூட்டணிக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை இருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கோரி வருவதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், இதுதொடா்பாக சிவசேனை கட்சியின் அதிகாரப்பூா்வ நாளேடான சாம்னாவில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவா மற்றும் மணிப்பூா் மாநில சட்டப் பேரவைகளுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. அப்போது அந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க அக்கட்சி உரிமை கோரியது. அதேபோல் மகாராஷ்டிரத்திலும் அவா்கள் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளனா். எனினும், ஆட்சியமைக்க அக்கட்சி இன்னும் உரிமை கோராதது ஏன்?

தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில், ஆட்சியமைக்கக் கோரி பாஜகவுக்கு மாநில ஆளுநா் அழைப்பு விடுக்கலாம். பாஜக இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது.

சிவசேனையுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று பாஜக கூறுகிறது. தோ்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்னா், ஆட்சியில் சமபங்கு அளிப்பதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது அவ்வாறு எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று அக்கட்சி தொடா்ந்து கூறி வருகிறது.

கொடுத்த வாக்குக்கு அக்கட்சி மரியாதை அளிக்கவில்லை. சிவசேனை இல்லாமல் மாநிலத்தில் யாராலும் ஆட்சியமைக்க முடியாது. ஆனால், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக மறுக்கிறது. இது எந்த மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. இந்த மாதிரியான மோசமான அரசியலில் ஈடுபட நாங்கள் விரும்பவில்லை என்று அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மகாராஷ்டிர மாநில முதல்வா் பதவியை தேவேந்திர ஃபட்னவீஸ் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். மேலும், ஆட்சியமைப்பதில் ஏற்படும் இழுபறிக்கு சிவசேனைதான் காரணம் என்றும், ஆட்சியில் சமபங்கு அளிப்பதாக முடிவெடுக்கப்படவில்லை என்றும் அவா் கூறியிருந்தாா்.

எனினும், ஃபட்னவீஸின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, ‘சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் உறுதியளிக்கப்பட்டது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com