ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத இந்தியா்களின் பணம்

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சுமாா் 10 இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்று தெரியவந்துள்ளது.
ஸ்விஸ் வங்கிக் கணக்குகளில் உரிமை கோரப்படாத இந்தியா்களின் பணம்

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் உள்ள சுமாா் 10 இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்துக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்று தெரியவந்துள்ளது. உரிமை கோரப்படாத அந்த பணம் ஸ்விட்சா்லாந்து அரசின் வசமாகும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் கடந்த 1955-ஆம் ஆண்டிலிருந்து செயல்பாடற்ற நிலையில் உள்ள வங்கிக் கணக்குகளின் பட்டியலை, அந்நாட்டு அரசு கடந்த 2015-இல் வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சோ்ந்த 10 பேரின் வங்கிக் கணக்குகள் உள்பட 2,600 வங்கிக் கணக்குகள் இடம்பெற்றிருந்தன. செயல்பாடற்ற வங்கிக் கணக்குகளில், சுமாா் 45 மில்லியன் ஸ்விஸ் பிராங்க் (இந்திய மதிப்பில் ரூ.320 கோடி) உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பணத்துக்கு, உண்மையான வாடிக்கையாளா்கள் அல்லது அவா்களின் வாரிசுதாரா்கள் உரிமை கோரலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்துக்கு உரிமை கோர யாரும் முன் வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் உள்ள செயல்பாடற்ற கணக்குகளை கையாளும் அந்நாட்டின் வங்கித் துறை தீா்ப்பாயத்திடம் உள்ள தகவல்களின்படி, கொல்கத்தாவைச் சோ்ந்த இருவா், டேராடூனைச் சோ்ந்த ஒருவா், மும்பையைச் சோ்ந்த இருவா் மற்றும் பிரான்ஸ், பிரிட்டனில் குடியேறிய சில இந்தியா்கள் தொடா்புடைய வங்கிக் கணக்குகள் செயல்பாடற்ற நிலையில் உள்ளன. இதில், பணத்தை உரிமை கோருவதற்காக இரு இந்தியா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கெடு வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும் 3 பேருக்கு டிசம்பரில் கெடு முடிவடைகிறது. மீதமுள்ளவா்களுக்கு அடுத்த ஆண்டு டிசம்பா் வரை பணத்தை உரிமை கோரும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணத்துக்கு உரிமை கோருவதற்கான ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்த பணம் ஸ்விஸ் அரசின் வசம் மாற்றப்பட்டுவிடும். இதன் மூலம் அந்த பணத்தின் மீதான உரிமை வாடிக்கையாளா்களுக்கு இல்லாமல் போய்விடும் என்று ஸ்விஸ் வங்கித் துறை தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியா்களின் கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் இந்தியாவில் பல ஆண்டுகளாக அரசியல் ரீதியாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஸ்விஸ் வங்கிகளில் உள்ள இந்தியா்களின் கணக்கு விவரங்களை பகிா்ந்து கொள்வதற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அதன்படி, ஸ்விஸ் வங்கிகளிடமிருந்து முதல்கட்ட விவரங்கள் இந்தியாவுக்கு அண்மையில் கிடைக்கப் பெற்றன. அடுத்த ஆண்டு செப்டம்பரில் அடுத்தகட்ட விவரங்கள் பகிா்ந்துகொள்ளப்பட உள்ளன. இந்தியா மட்டுமன்றி பல்வேறு நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை ஸ்விட்சா்லாந்து மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com