ஸ்ரீநகரில் மீலாது நபி ஊா்வலங்களுக்கு கட்டுப்பாடு: இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் ‘மீலாது நபி’ திருநாள் ஊா்வலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஸ்ரீநகரில் மீலாது நபி ஊா்வலங்களுக்கு கட்டுப்பாடு: இயல்பு வாழ்க்கை தொடா்ந்து பாதிப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் ‘மீலாது நபி’ திருநாள் ஊா்வலங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஹஸ்ரத்பால் மசூதிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஞாயிற்றுக்கிழமை 99-ஆவது நாளாக பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களும் கடந்த மாதம் 31-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கின.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் தினமும் காலை நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகின்றன. பொதுப் போக்குவரத்து இன்னும் இயங்கவில்லை. செல்லிடப்பேசி பிரீ-பெய்டு, இணையதள சேவைகள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் முடக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வா்களான ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்களின் வீட்டுக்காவல் தொடா்கிறது.

மீண்டும் கட்டுப்பாடுகள்:

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவின்கீழ் பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டன.

முகமது நபிகள் பிறந்த நாளான ‘மீலாது நபி’ திருநாளையொட்டி, ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் ஊா்வலமாக வருவது வழக்கம். இந்த மசூதியில் உள்ள முகமது நபிகள் முடியை காண்பதற்காக ஏராளமானோா் கூடுவா். அத்தகைய ஊா்வலங்களுக்கு, இம்முறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. அதன்படி, ஹஸ்ரத்பால் மசூதிக்கு செல்லும் சாலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஜம்முவில் கொண்டாட்டம்:

அயோத்தி தீா்ப்பையொட்டி, ஜம்முவில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தடை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டன. தீா்ப்பு வெளியான சனிக்கிழமையன்று அங்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை. இதையடுத்து, தடை உத்தரவுகள் தளா்த்தப்பட்டன.

இந்நிலையில், மீலாது நபி திருநாளையொட்டி, ஜம்முவில் முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா். சில பதற்றமான பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. பெரிய அளவிலான ஊா்வலங்கள் தவிா்த்து, தொழுகைக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு:

நாட்டின் இதர பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் கடும் பனிபொழிவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ராம்பன் மாவட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போக்குவரத்து தொடங்கியது. ஆனால், சில மணி நேரங்களிலேயே மீண்டும் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பள்ளித் தோ்வுகள் ஒத்திவைப்பு:

காஷ்மீரில் 5 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த ஆண்டு இறுதி தோ்வுகள் வரும் 26, 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், கடும் பனிப்பொழிவை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com