மகாராஷ்டிராவில் எடுபடாத ராஜதந்திரம்: இது என்னடா அமித்ஷாவுக்கு வந்த சோதனை..

"ஒரே தேசம், ஒரே கட்சி" என்பதை நோக்கி இந்தியா நகரத் தொடங்கிவிட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, "ஒரே தேசம், ஒரே இடத்தில் அதிகாரம்" என்கிற சித்தாந்தத்தை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து துரிதமாக நிறைவேறியது.

இது ஒருபுறம் அரங்கேறிக்கொண்டு இருந்த அதே நேரத்தில் இதற்கு இணையாக "ஒரே தேசம், ஒரே கட்சி" என்பதை நோக்கியும் இந்தியா நகரத் தொடங்கிவிட்டதா என்கிற சந்தேகமும் எழுந்தது.

இந்திய அரசியலில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது "கட்சித் தாவல் இங்கே தர்மமடா" என பாடல் வரியில் இடம்பிடிக்கும் அளவுக்கு மிகச் சாதாரண விஷயம்தான். ஆனால், அதுவே தற்போது சற்று நவீனமடைந்து எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் என கூட்டம் கூட்டமாக ஒரு கட்சியின் முக்கியத் தலைவர்களே படையெடுக்கும் காட்சியாக மாறியுள்ளது.

இதுமட்டுமில்லாது, தொகுதிப் பிரதிநிதியாக மக்களின் ஆதரவால் தேர்வான பிறகு, ஆதரவளித்த மக்களால் நிராகரிக்கப்பட்ட மற்றொரு கட்சியிலே போய் இணைந்த செயல்களும் அப்பட்டமாக அரங்கேறியது.

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கோவா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏ-க்கள் கூட்டாக கட்சித் தாவியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த காங்கிரஸ் மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் அம்மாநிலங்களின் பேரவையில் தற்போது ஒற்றை இலக்கு உறுப்பினர்களுடன் உள்ளது.

இதில் சிக்கிமில் பிராந்தியக் கட்சிகள் மட்டுமே மக்களால் பேரவைக்கு தேர்வான நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்எல்ஏ-க்கள் கூட்டாக தேசியக் கட்சியான பாஜகவில் இணைந்து அந்தக் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர். இந்த மாநிலத்தில், மாநில சுயாட்சி கேள்விக்குள்ளாகாமல் இருக்குமா என்பதற்கான பதிலை அம்மாநில மக்களிடம் விட்டுவிடுவோம்.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மட்டுமே, சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள், 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பாஜகவுக்கு கட்சித் தாவியுள்ளனர்.

இது கடந்த ஆகஸ்ட் மாத நிலவரம்தான். இதன்பிறகும், கட்சித் தாவல் நிகழ்வுகள் இங்கே கோலாகலமாக நடைபெற்றது. இது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.

17-வது மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பாக அரக்கோணம், கிருஷ்ணகிரி மற்றும் சிதம்பரம் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பாஜகவில் இணைந்தனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்எல்ஏ-க்கள் 17 பேர் ராஜிநாமா செய்ததால் அங்கு ஆட்சி மாற்றமே நிகழ்ந்தது. இதையடுத்து, சபாநாயகர் 17 எம்எல்ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சபாநாயகரின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் என இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து, அந்த 17 பேரும் நாளை (14 நவம்பர்) பாஜகவில் இணையவுள்ளனர்.

இதுபோன்ற சூழலுக்கு மத்தியில் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதிலும், தங்களது வெற்றி நடையை எந்தவித இடையூறுமின்றி தொடர பாஜக விரும்பியது. இதன்காரணமாக, இந்த யுத்தியை மகாராஷ்டிராவில் மிகவும் வீரியமாக கையாண்டது பாஜக.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இடைபட்ட காலத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளில் இருந்து எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், முக்கியத் தலைவர்கள் பலர் பாஜக மற்றும் சிவசேனையில் இணைந்தனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தனது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவுத் தலைவர் சச்சின் அஹிர் சிவனையில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கியமான தலைவரான நிதிஷ் ராணே, எம்எல்ஏ-க்கள் காஷிராம் பவாரா, கோபால்தாஸ் அக்ரவால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நமீதா முண்டாடா, எம்எல்ஏ-க்கள் ஷிவேந்திரசின் போஸலே, வைபவ் பிச்சத் என அலையலையாய் பாஜகவிலும் சிவசேனையிலும் போய் இணைந்தனர்.

இதில் கட்சி மாறிய எம்எல்ஏ-க்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து பாஜகவிலும், சிவசேனையிலும் இணைத்துக்கொண்டனர். பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டனர். ஆனால், இந்த முறை மாறிய கட்சியின் பிரதிநிதியாக..

பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் அகாதி கட்சியைச் சேர்ந்த கேபிசந்த் படால்கர் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், இப்படி எதிர்க்கட்சிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதில், நிதிஷ் ராணே, ராதாகிருஷ்ணன் பாட்டீல், காஷிராம் பவாரா, நமீதா முண்டாடா என குறிப்பிட்ட சிலர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சி மாறி பாஜக மற்றும் சிவசேனை சார்பாக போட்டியிட்ட 35 பேரில் ஏறத்தாழ 19 பேர் வரை தோல்வியடைந்ததாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது.

இருந்தபோதிலும், இந்த யுத்தி எதிர்க்கட்சிகளில் குறிப்பிடத்தக்க சில தாக்கங்களை ஏற்படுத்தியது.

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கைஜ் தொகுதியின் வேட்பாளர் நமீதா முண்டாடா என அறிவித்த பிறகே, நமீதா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனால், அந்த தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்து நமீதா பாஜக வேட்பாளராக வெற்றி கண்டார்.

2014 மக்களவைத் தேர்தலில் கோண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இந்த சட்டப்பேரைவத் தேர்தலுக்கு முன் அந்த பதவியை ராஜிநாமா செய்து பாஜவில் இணைந்தவர் கோபால்தாஸ் அக்ரவால். இவர் இந்த முறை பாஜக சார்பில் போட்டியிட்டதால், தேர்தல் களத்தில் காங்கிரஸ் போட்டியிலேயே இல்லாமல் போனது. காரணம், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்துடன் கோபால்தாஸ் அகர்வால் இருந்தார். சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட வினோத் அகர்வால் பாஜகவுக்கு போட்டியாகத் திகழ்ந்தார். இதில், கோபால்தாஸ் அகர்வாலுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரே ஆதரவு அளித்தனர். வினோத் அகர்வால் முன்னதாக பாஜகவில் இருந்ததால், தான் பாஜகவில் இணைந்துவிடுவேன் என்று கூறியே பிரசாரம் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால், காங்கிரஸ் போட்டியிலேயே இல்லாமல் போனது. தேர்தலில் சுயேச்சை வேட்பாளரே வெற்றி பெற்றார். வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவு பாஜகவுக்கே எனவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், காங்கிரஸ் வசம் இருந்த கோண்டியா தொகுதி தற்போது அவர்கள் வசம் இருந்து பறிக்கப்பட்டது பாஜகவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.

இதில், மிகவும் முக்கியமான நகர்வாக பார்க்கப்பட்டது சச்சின் அஹிர், ஆதித்யா தாக்கரே கூட்டணி. பால் தாக்கரே சிவசேனை கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிட்டதில்லை. உத்தவ் தாக்கரேவும் அதே பாணியைத்தான் கடைபிடித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த குடும்பத்தில் இருந்து முதன்முதலாக ஆதித்யா தாக்கரே தேர்தலில் களம் புகுந்தார். இவர் வோர்லி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியானது. இந்த சூழலில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவுத் தலைவர் சச்சின் அஹிர் சிவனையில் இணைந்தார்.

வோர்லி தொகுதியில் கடந்த தேர்தலில் இவர் சிவசேனையிடம் தோல்வியடைந்திருந்தாலும், அந்த தொகுதியில் இவருக்கென தனி செல்வாக்கு இருந்தது. இவரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் சிவசேனையில் இணைந்ததால், அந்த தொகுதியில் ஆதித்யா தாக்கரேவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. எதிர்பார்த்ததைப்போல் வோர்லி தொகுதியில் 69 சதவீத வாக்குகளைப் பெற்று தனது முதல் தேர்தலிலேயே ஆதித்யா தாக்கரே அபார வெற்றி பெற்றார். தேர்தல் பிரசார நேரத்தில் மகாராஷ்டிர முதல்வர் ஆதித்யா தாக்கரே என ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனை கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையான இடங்களுடன் வெற்றி பெற்றன. இருந்தபோதிலும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரண்டு கட்சிகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வில் உடன்பாடு எட்டப்படாததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என சிவசேனை வைக்கும் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்தது. மக்களவைத் தேர்தலின்போதே இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று பாஜக இந்த கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொண்டதாக சிவசேனை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், தேர்தலுக்கு முன்பு இதுபோன்ற எந்தவித ஒப்பந்தமும் போடப்படவில்லை என பாஜக திட்டவட்டமாக மறுத்தது.

இதனால், இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் இருக்க, கடைசியில் தேவேந்திர ஃபட்னவீஸ் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். பாஜக இதற்கு மறுப்பு தெரிவிக்க, சிவசேனையை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். சிவசேனை இதற்கு 2 நாள் அவகாசம் கேட்க, பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இப்படி அடுத்தடுத்த திருப்பங்களின் நீட்சியாக, மாநில ஆளுநர் கோஷியாரி குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்து மேற்கொண்டு ஒரு திருப்பத்தையும் உண்டாக்கினார். குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளிக்க, மகாராஷ்டிராவில் இறுதியில் குடியரசுத் தலைவர் ஆட்சியே அமலுக்கு வந்துவிட்டது.

எதிர்க்கட்சிகளில் இருந்து முக்கியத் தலைவர்களையே தங்களது கட்சிகளில் இணைக்க முடிந்த பாஜக - சிவசேனை கூட்டணியால், தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக்குள்ளேயே உடன்பாட்டை எட்டமுடியாமல் போனது மக்கள் அளித்த தீர்ப்பை அவமதித்துள்ளதா என்ற யதார்த்த கேள்வியை எழுப்புகிறது. அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர்களை ஈர்த்து, அவர்களையே வேட்பாளர்களாக களமிறக்கி எதிர்க்கட்சிகளை வீழ்த்த வியூகம் வகுத்து, தேர்தலில் வெற்றியும் பெற்ற பிறகு, அவையனைத்தும் ஆட்சி அமைப்பதற்கு உதவாமல் போனது என்பது மிகப் பெரிய நகைமுரணாக அமைந்துள்ளது.

இது என்னடா பாஜகவுக்கு வந்த சோதனை..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com