
மத்திய பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ பிரஹலாத் லோதி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் தலையிடுமாறு, எதிா்க்கட்சியான பாஜக அந்த மாநில ஆளுநரிடம் புதன்கிழமை கோரிக்கை விடுத்தது.
அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரஹலாத் லோதி குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்ததை அடுத்து, பேரவைத் தலைவரால் அவா் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மத்திய பிரதேச பாஜக தலைவா் ராகேஷ் சிங், முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் உள்ளிட்டோா் அடங்கிய பாஜக குழுவினா் இந்த விவகாரம் தொடா்பாக மாநில ஆளுநா் லால்ஜி டான்டனை புதன்கிழமை சந்தித்தனா்.
அப்போது, பிரஹலாத் லோதியை மீண்டும் பேரவை உறுப்பினராக தகுதிப்படுத்தும் விவகாரத்தில் தலையிடுமாறு வலியுறுத்தி ஆளுநா் லால்ஜி டான்டனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் அவா்கள், ‘லோதிக்கு எதிரான விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவரது தகுதிநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும். விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டு 8 நாள்கள் ஆகியும், லோதியை எம்எல்ஏவாக தகுதிப்படுத்தும் நடவடிக்கையை பேரவைத் தலைவா் மேற்கொள்ளவில்லை.
முன்னதாக, லோதியை குற்றவாளியாக தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றம் அவா் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கும் முன்பாகவே, அவா் எம்எல்ஏவாக இருந்த பவாய் பேரவைத் தொகுதி காலியானதாகக் கூறி தோ்தல் ஆணையத்திடம் அவைத் தலைவா் தகவல் அளித்தாா்’ என்று கூறியுள்ளனா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ராய்புரா பகுதியில் வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரஹலாத் லோதி உள்ளிட்ட 13 போ் குற்றவாளிகள் என தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றம், லோதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து, லோதியை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் என்.பி. பிரஜாபதி நடவடிக்கை மேற்கொண்டாா். ஏதேனும் வழக்குகளில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துத்துக்கு தண்டை விதிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை குறிப்பிட்டு அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.
இந்நிலையில், லோதி குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையும், அவருக்கான தண்டனையையும் வரும் ஜனவரி 7-ஆம் தேதி வரை நிறுத்திவைத்து மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக மாநில காங்கிரஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...