கீழடி ஸ்பெஷல் ; செம்பியன் கண்டியூர் தொன்மை

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குற்றாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது
Sembiyan kandiyur
Sembiyan kandiyur


செம்பியன் கண்டியூர் (Sembiyan kandiyur)
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் குற்றாலத்திலிருந்து இரண்டு கி.மீ. தொலைவில் செம்பியன் கண்டியூர் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இவ்வூர் காவிரி ஆற்றின் கிளை நதியான விக்கிரமன் ஆற்றின் மேற்கரையில் அமைந்துள்ளது. வில்லிய நல்லூர் எனும் வருவாய் கிராமத்தின் உட்கிராமமாகத் தொன்றுதொட்டு வரலாற்றுச் சிறப்புடன் விளங்கி வருகிறது.

தொன்மை கண்டுபிடிப்பு 
செம்பியன் கண்டியூர் என்ற ஊரில் வசிக்கும் வி. சண்முகநாதன் என்ற ஆசிரியர் பிப்ரவரி 2006-இல், தன்னுடைய வீட்டின் கொல்லைப் பக்கத்தில் வாழையும், தென்னையும் பயிரிடுவதற்காக குழிவெட்டிய போது இரண்டு கற்கோடாலிகளைக் கண்டு எடுத்தார். இந்த ஆசிரியருக்கு ஏற்கனவே தொல்லியல் ஆய்வில் ஆர்வம் இருந்திருக்கிறது. எனவே அவர் தமது நண்பர் G.முத்துசாமி என்பவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்க அவரும் அங்கு விரைந்து வந்தார். இவர் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தரங்கம்பாடியில் உள்ள டச்சுக்காரர்களின் கோட்டை அருங்காட்சியகத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர். அவர் அந்த கற்கோடாலிகள் இரண்டையும் எடுத்து T.S.ஸ்ரீதர் என்றதொல்லியல்துறை  உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். இவர் தமிழ்நாடு தொல்லியல் துறையில் சிறப்பு ஆணையராகப் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவர் அதை தூய்மை செய்து பார்த்தபொழுது அதில் சில வரைவுகள் அல்லது பொறிப்புகள் இருப்பதைக் கண்டு கல்வெட்டு ஆய்வாளர்களிடம் அதைப் பார்க்கும்படி கூறியுள்ளார்.

அவர்கள் அதைப் பார்த்ததும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். ஏன்? 
அந்தக் கோடாலியில் நான்கு வடிவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவையாவும் சிந்துக்குறியீடுகளைப் போலவே இருந்தது தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். கிடைத்தது இரண்டு கோடாலிகள் அதில் ஒன்றில் மட்டும் இந்தக் குறியீடுகள் உள்ளன. மற்றொன்றில் வடிவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பதிவுகள் உள்ள கோடாலியின் அளவு 65 cm  / 2.5 cm  / 3.6 cm  /4 cm . அதன் எடை 125கிராம். பிறகு அது சிந்துக் குறியீட்டு ஆய்வாளரான ஐராவதம் மகாதேவனிடம் காண்பிக்கப்பட்டது. அவர் எண்வரிசைப்படி சிந்துக் குறியீடுகளை ஆவணப்படுத்தி வைத்திருப்பவர். இந்த எண்கள், வரிசை, எல்லாம் அவராக அமைத்துக் கொண்டது. அவர் அந்த கோடாலியில் உள்ள நான்கு பொறிப்புகளில் முதலாவது எண் 48 ஐயும், இரண்டாவது எண் 342, 3வது எண் 367, நான்காவது எண் 301ஐயும் ஒத்து இருக்கிறது என்று உணர்ந்தார்.

செம்பியன் கண்டியூர் தொல்பொருள்
கைக்கோடரிகள், உடைந்த சுடுமண் கைப்பிடி, இரும்பு வளையம், இரும்பு ஆணி, பானையோடுகளால் செய்த வட்டுக்கள், ஸ்வஸ்திகா, உடுக்கை, முக்கோண வடிவம், இரண்டு முக்கோணங்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டுள்ளது போன்ற குறியீடுகள் கீறப்பட்ட பானையோடுகள், கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு வழவழப்பான பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், உருண்டையான பானை, கும்ப அமைப்பில் குவிந்த பானை, அகலமான தொட்டி அமைப்பில் பானை, தட்டு, குடுவை, குவளை, கிண்ணம், கால்கள் கொண்ட ஜாடி, ஒரு உடைந்த புதிய கற்காலக் கைக்கோடாரி போன்றவை கிடைத்தன.

செம்பியன்கண்டியூர் ஒரு புதிய கற்காலப்பகுதி வாழ்விடமாகும். இங்கு மேற்பரப்பாய்வில் கிடைத்த இரண்டு கைக்கோடரிகளுள் ஒன்றில் எழுத்துப் பொறிப்புகள் காணப்படுகின்றன. செம்பியன் கண்டியூரி்ல் அகழாய்வுக் குழியில் உடைந்த நிலையில் ஒரு புதிய கற்காலக் கைக்கோடரி கிடைத்துள்ளது. மேலும் அதிகளவிலான இரும்பு பொருட்களும் கிடைத்துள்ளன. மேலும் சுடுமண்ணாலான பொருட்கள் அகழாய்வில் பெறப்பட்டுள்ளன. புதிய கற்காலத்தில் மக்களின் வாழ்க்கையில் வேளாண்மைக்குத் தேவையான இரும்பின் பயன்பாடும், நிலையான குடியிருப்புகளுக்கான இரும்பு ஆணிகளும் செம்பியன் கண்டியூரில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

செம்பியன் கண்டியூரில் கிடைத்த இரண்டு புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் ஆய்விற்கு கொண்டு வரப்பட்டன.  அந்த கைக்கோடாரியில் ஒன்றில் சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புடைய சித்திர எழுத்துக்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. புதிய கற்கால கைக்கோடாரியில் இதுபோன்ற சித்திரக் குறியீடுகள் எங்கும் கிடைக்கவில்லை. இந்த புதிய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரியில் காணப்படும் எழுத்துக்கள் தமிழ்-பிராமிக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. சிந்துவெளி எழுத்துக்களோடு தொடர்புடையதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழக தொல்லியல் துறையின் சிறப்பு ஆணையர் டி. எஸ். ஸ்ரீதரின் கூற்றுப்படி, இதில் நான்கு குறியீடுகள் அடையாளம் காணப்பட்டன. ஐராவதம் மகாதேவன்  இந்தக் கண்டுபிடிப்பானது தமிழ்நாட்டில் வாழ்ந்த புதிய கற்கால மக்களும் சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்களும் "ஒரே மொழியைப் பேசியவர்கள் அது தமிழ் மொழிதான் இந்தோ ஆரிய மொழி அல்ல" என்பதற்கு இது உறுதியான சான்று என்கிறார்.  இந்தக் கண்டுபிடிப்பிற்கு முன்னர், சிந்து சித்திர எழுத்துகளானது தென்னிந்திய தீபகற்பத்தில், மகாராட்டிரத்தின் கோதாவரி சமவெளியில் பிரவர ஆற்றுப் பகுதியில் கிடைத்துள்ளன. இந்தக் கல்லானது வட இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்ற கூற்றை திரு ஐராவதம் மகாதேவன் உறுதியாக மறுத்தார். இந்த கற்கள் முழுக்கமுழுக்க தென்னிந்திய பாறைவகையைச்சேர்ந்தது என்றார்.  கி.மு. 1500க்கும் கி.மு.2000க்கும் இடைப்பட்ட காலத்தைச்சார்ந்ததாக இந்த கற்கள் இருக்கவேண்டும்" என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

சிறப்புகள்
புதிய கற்காலக் கோடரி, சிந்து சமவெளி எழுத்துக்களுடன் கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதன்முறை.புதிய கற்காலப் பண்பாட்டுத் தமிழ் மக்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடை தொடர்பினை வலியுறுத்துகிறது.தமிழகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுப் பரவலுக்கான நேரடிச்சான்று. ஹரப்பன் எழுத்துக்களின் காலக்கணக் கீட்டுக்கு உதவும் நேரடிச்சான்று. தமிழரின் எழுத்துத் தொன்மையினை உறுதிப் படுத்தும் மிகச்சிறந்த சான்று.

தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞான பூர்வமான சான்றுகள் ; தன்னிகரில்லாத நம் தமிழ்மொழி குறித்துப் பெருமை கொள்வோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com