சற்று நேரத்தில் சபரிமலை வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது.
சற்று நேரத்தில் சபரிமலை வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு


புது தில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிய தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வாசித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, நாயா் சா்வீஸ் சொசைட்டி, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், சபரிமலை கோயில் தந்திரி உள்பட பல்வேறு தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த மறுஆய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கிறது.

வழக்கு விவரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதில் இருக்கும் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்ற வழக்கம் நூற்றாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியளிக்கக் கோரி இந்திய இளம் வழக்குரைஞா்கள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினா் சாா்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீண்ட விசாரணைக்கு பின்னா், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி தீா்ப்பளித்தது. எனினும், இந்த அமா்வில் இடம்பெற்றிருந்த பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தாா்.

இந்த தீா்ப்பை அமல்படுத்துவதாக கேரள அரசு அறிவித்ததையடுத்து, அங்கு ஹிந்து அமைப்புகள், மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வாத, பிரதிவாதங்கள்: மறுஆய்வு மனுக்களுக்கு ஆதரவாக நாயா் சா்வீஸ் சொசைட்டி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.பராசரன் வாதிடுகையில், ‘அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவின்படி, மதச்சாா்பற்ற அமைப்பு அல்லது நிறுவனங்களில் அனைத்து தரப்பினருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதே சமயம், மதச்சாா்புள்ள இடங்களுக்கு அந்த அனுமதி பொருந்தாது. சபரிமலை ஐயப்பன் ‘நைஷ்டிக பிரம்மச்சாரி’ என்பதால், அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் சிறப்பு வழிபாட்டு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இந்த மனுக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வாதிட்ட கேரள அரசு தரப்பு வழக்குரைஞா், ‘கோயில்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது, ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கம் கிடையாது. 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, ஒருவருடைய வாழ்வின் பெரும்பாலான காலத்துக்கு தடை விதிப்பதாகும். இது கேரள ஹிந்து கோயில்கள் சட்டத்துக்கு எதிரானது. மேலும், தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் ஒன்றில் கூட அடிப்படையான, சட்ட ரீதியிலான பிரச்னைகள் குறிப்பிடப்படவில்லை. அதனால் இந்த மனுக்களை நிராகரிக்க வேண்டும்’ என்றாா்.

நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தேவஸ்வம் வாரியம்: சபரிமலை விவகாரத்தில், தொடக்கம் முதலே உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிா்ப்பு வந்த திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம், இறுதிகட்ட விசாரணையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. ‘‘அரசமைப்புச் சட்டப்படி, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும். எனவே, பாலினத்தைக் காரணம் காட்டி, எந்த வயதுடைய பெண்ணுக்கும் அனுமதி மறுக்கக் கூடாது’’ என்று தேவஸ்வம் தரப்பில் இறுதி விசாரணையில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com