சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்: பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை!

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை வலுக்கட்டாயமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர் கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  
Sabarimala_women
Sabarimala_women

10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று  உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு நாடு முழுவதுமே பல எதிர்ப்பலைகள் கிளம்பின. அதைத் தொடர்ந்து, சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில்,  அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை தொடரும் என்றும் தெரிவித்தது. 

சபரிமலையில் தொடர்ந்து இரண்டு மாத காலம் நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜையானது வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ளது.  இந்நிலையில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த முறை போலவே, இவர்களுக்கு மாநில அரசு போதிய பாதுகாப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சூழ்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்று பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். மிசோரம் மாநிலத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக தலைவருமான கும்மனம் ராஜசேகரன், 'உச்சநீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் இந்த விவகாரத்தை ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்பு சாசன அமர்விற்கு மாற்றிய பின்னரும் கூட, சபரிமலை கோவிலுக்கு பெண்கள் நுழைவதை ஆதரிக்க முயன்றால் கேரள அரசு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று கூறினார். .

'சபரிமலை கோவிலுக்கு நம்பிக்கையற்றவர்களைக் கொண்டு வர முயற்சி செய்தால் அது பின்னாளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக வரவேற்கிறது. ஆனால் சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு கேரள அரசு ஆதரவளிக்கக்கூடாது என்று விரும்புகிறோம்' என பாஜக மாநில பொதுச் செயலாளர் எம்.டி.ரமேஷ் தெரிவித்தார். 


மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி.முரளீதரன் பேசும்போது, 'உச்சநீதிமன்றம் முந்தைய உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. அதற்காக அதனை உறுதி செய்ததாக கருத முடியாது. முந்தைய தீர்ப்பில் சில முரண்பாடுகள் இருப்பதால், இந்த பிரச்னையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியுள்ளது. இதற்கு நீதிமன்றம் தீர்வு காணும் வரை சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் கேரள அரசு சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்' என்று கூறினார்.

அதேபோன்று, பாஜக மூத்த தலைவர் ராஜகோபால், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மறுமலர்ச்சி என்ற பெயரில் இரண்டாவது சிந்தனையை கொடுக்காமல் பழமையான மரபுகளை மாற்ற முயற்சித்தால் அது மாநில அரசுக்கு ஒரு பின்னடைவாகும். மசூதிகளில் முஸ்லீம் பெண்ககளை அனுமதிக்கும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால், மாநில அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com