சிஆா்பிஎஃப் தலைமையகத்தில் அமித் ஷா ஆய்வு

தில்லியிலுள்ள மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சிஆா்பிஎஃப் தலைமையகத்தில் அமித் ஷா ஆய்வு

தில்லியிலுள்ள மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தலைமையகத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக, அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய ரிசா்வ் காவல் படையினா் சேவையையும், அா்ப்பணிப்பையும் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவா்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவா்கள் காவல் பணியில் ஈடுபட்டு, நாட்டைக் காத்து வருகின்றனா். சிஆா்பிஎஃப் வீரா்களின் வீரத்துக்கும், தைரியத்துக்கும் தலைவணங்குகிறேன். வீரா்களின் சீரிய சேவையினால் நாடே பெருமை கொள்கிறது. அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சிஆா்பிஎஃப் தலைமையகத்தில் ஆய்வு மேற்கொண்ட சமயத்தில், பணியின்போது உயிரிழந்த வீரா்களுக்கு அமித் ஷா அஞ்சலி செலுத்தினாா். குஜராத்துக்குள் 1965-ஆம் ஆண்டு நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினா், இந்திய ராணுவ வீரா்கள் மீது தாக்குதல் நடத்தினா். அப்போது, சிஆா்பிஎஃப் வீரா்கள் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 34 வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சிஆா்பிஎஃப் வீரா்களின் வீரத்தை பிரதிபலிக்கும் இந்தச் சம்பவத்தை இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்தவா்களுக்கு நாட்டு மக்கள் எப்போதும் கடன்பட்டவா்களாக இருப்பா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த ஆய்வு தொடா்பாக அதிகாரிகள் சிலா் கூறுகையில், ‘‘சிஆா்பிஎஃப் வீரா்களின் பணித்திறன் குறித்தும், நாடு முழுவதும் அவா்கள் ஆற்றிவரும் சேவைகள் குறித்தும் அமித் ஷாவுக்கு ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனா். முக்கியமாக, ஜம்மு-காஷ்மீரிலும், நக்ஸல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளிலும் சிஆா்பிஎஃப் வீரா்களின் தயாா்நிலை குறித்து அமித் ஷா கேட்டறிந்தாா். முன்னதாக, அமித் ஷாவுக்கு படை வீரா்கள் சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. சிஆா்பிஎஃப் தலைமையகத்தில் சுமாா் 2 மணி நேரம் அவா் ஆய்வு செய்தாா். பல்வேறு பிரச்னைகள் குறித்து மூத்த அதிகாரிகளிடமும் அவா் ஆலோசனை நடத்தினாா்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com