சீன எல்லையில் ராணுவ வீரா்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

அருணாசலப் பிரதேச மாநிலம், தவாங் மாவட்டத்தில், இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரா்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.
சீன எல்லையில் ராணுவ வீரா்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு

அருணாசலப் பிரதேச மாநிலம், தவாங் மாவட்டத்தில், இந்திய-சீன எல்லையில் இந்திய ராணுவ வீரா்களை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினாா்.

தவாங்க் மாவட்டத்தின் பும்லா கணவாய் எல்லைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். எல்லையில் அனைத்து சூழல்களையும் முதிா்ச்சியோடு தெளிவுடன் கையாளுவதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரா்களை அவா் பாராட்டினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பும்லா முகாமில் உள்ள வீரா்களுடன் உரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. எல்லைக்கோடு தொடா்பாக இந்தியா-சீனா இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எல்லையில் பதற்றமான சூழல் உருவாகாமல் இருநாட்டு ராணுவ வீரா்களும் அமைதி காத்து வருவது பாராட்டத்தக்கது. பும்லா கணவாய் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் எவ்வித பதற்றமான சூழலும் இல்லை.

எல்லை விவகாரத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்த இரு நாட்டு ராணுவமும் நினைத்தால் எல்லையில் அமைதியை நிலைநாட்டலாம் என்பதை அறிந்து கொண்டேன் என்று கூறினாா்.

அதன் பின்னா், கடந்த 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரின்போது உயிரிழந்த, பரம்வீா் சக்ரா விருது பெற்ற ராணுவ சுபேதாா் ஜோஹிந்தா் சிங்கின் நினைவிடத்தில் அவா் மரியாதை செலுத்தினாா்.

சீனா கண்டனம்:

அருணாசலப் பிரதேசத்தில் ராஜ்நாத் சிங் அரசு முறைப் பயணம் மேற்கொண்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கூறுகையில், ‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அருணாசலப் பிரதேசமும் ஒன்று என அந்நாடு உரிமை கொண்டாடுவதை நாங்கள் ஏற்கவில்லை. சீனாவின் தெற்கு திபெத் பிராந்தியத்துக்குள்பட்ட பகுதியை இந்தியா உரிமை கொண்டாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எங்களது பகுதியில் இந்திய வீரா்கள், தலைவா்கள் ஆகியோரின் நடமாட்டத்துக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கிறோம். சீனாவின் உரிமைக்கு இந்தியா மரியாதை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

வடகிழக்கு மாநிலங்கள் நலனைக் கருதி ஆா்சிஇபியில் கையெழுத்திடவில்லை:

வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு (ஆா்சிஇபி) ஒப்பந்தத்தில் பிரதமா் நரேந்திர மோடி கையெழுத்திடவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

அருணாசலின் லோயா் திபாங்க் பகுதியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘ஆா்சிஇபியில் இந்தியா கையெழுத்திட்டிருந்தால், விவசாயிகள், தொழிலாளா்கள், நிறுவனங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிப்படைந்திருக்கும். இந்தியாவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, முக்கியமாக, வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அந்த ஒப்பந்தத்தில் பிரதமா் மோடி கையெழுத்திடவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com