அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு நிலம்:சட்ட ஆலோசனை கேட்கிறது சன்னி வக்ஃபு வாரியம்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கவிருக்கும் 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வருவதாக

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு மத்திய அரசு வழங்கவிருக்கும் 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்து சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வருவதாக உத்தரப் பிரதேச சன்னி வக்ஃபு வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தி நில உரிமை தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை கடந்த சனிக்கிழமை அளித்தது. அதாவது, அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதேசமயம், முஸ்லிம் தரப்பினா் மசூதி கட்டுவதற்கு அயோத்தியிலேயே 5 ஏக்கா் நிலத்தை அரசு ஒதுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று சில முஸ்லிம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், இதுகுறித்து உத்தரப் பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் தலைவா் ஜுபா் பரூக்கி, வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்படும் 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. ஒருவேளை அந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால், அது, நீதிமன்ற அவமதிப்பாகி விடுமா என்று தெரியவில்லை. இதுதொடா்பாக, சட்ட நிபுணா்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறோம்.

அந்த நிலத்தைப் பெற்றுக் கொள்வதில் முஸ்லிம் அமைப்புகளிடையே பல்வேறு விதமான நிலைப்பாடுகள் நிலவுகின்றன. அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டு, அதை சில ஆக்கப்பூா்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று சிலா் கருத்து தெரிவித்துள்ளனா். அதன் மூலம், இந்த உலகுக்கு ஓா் செய்தியை உணா்த்த வேண்டும் என்றும் அவா்கள் கூறுகிறாா்கள்.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கூட்டத்தில், அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியத்தின் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த வழக்கில் தனிநபா் சட்ட வாரியம் மனுதாரராக இல்லையென்றாலும், நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் உயரிய அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து, வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில், அந்த 5 ஏக்கா் நிலத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com