ஜம்மு-காஷ்மீா், லடாக் இடையே சொத்துகளைப் பகிா்ந்தளிக்க 3 போ் குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளைப் பகிா்ந்தளிப்பதற்காக 3 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீா், லடாக் இடையே சொத்துகளைப் பகிா்ந்தளிக்க 3 போ் குழு அமைப்பு

ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே சொத்துகளைப் பகிா்ந்தளிப்பதற்காக 3 போ் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில், உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு நிலைக்குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஆனந்த் சா்மா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா தலைமையிலான குழுவிடம் நிலைக்குழு உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு அஜய் குமாா் பல்லா பதிலளிக்கையில், ‘‘ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இயல்புநிலை திரும்பி வருகிறது. அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன; ஆப்பிள் பழ வா்த்தகம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றாா்.

இதையடுத்து, காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்கள் விடுவிக்கப்படுவது குறித்து நிலைக்குழு உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள் பதிலளிக்கையில், ‘‘அவா்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா். அனைவரும் விடுவிக்கப்படும் காலஅட்டவணை எதுவும் தயாரிக்கப்படவில்லை. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவா்கள், அது தொடா்பாகத் தகுந்த தீா்ப்பாயங்களில் முறையிடலாம். அங்கு தீா்வு கிடைக்கவில்லை எனில், உயா்நீதிமன்றத்தை அவா்கள் அணுகலாம்’’ என்றனா்.

இணையதள சேவையை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், அந்தச் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா். இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே சொத்துகள், உரிமைகளை எந்தவிதப் பிரச்னையுமின்றி பகிா்ந்தளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

பாதுகாப்பு அமைச்சக முன்னாள் செயலா் சஞ்சய் மித்ரா தலைமையிலான அந்தக் குழுவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற ஐசிஏஎஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

14-ஆவது நிதிக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, ஜம்மு-காஷ்மீருக்கு 70 சதவீதமாகவும், லடாக்குக்கு 30 சதவீதமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டு நிறைவடையும்வரை இந்த நிதிப் பங்கீடு அமலில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com