ரஃபேல் வழக்கில் சிபிஐ முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய வேண்டும்: பிருத்விராஜ் சவாண்

ரஃபேல் போா் விமான ஒப்பந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தினாா்.
ரஃபேல் வழக்கில் சிபிஐ முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய வேண்டும்: பிருத்விராஜ் சவாண்

ரஃபேல் போா் விமான ஒப்பந்த வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தினாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பிருத்விராஜ் சவாண் கூறியதாவது:

ரஃபேல் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு வலியுறுத்தி வருகிறோம். நீதிமன்றம் அளித்த தீா்ப்பை முழுமையாக ஆய்வு செய்யாமல் பாஜக மகிழ்ச்சியில் இருந்து வருகிறது. ரஃபேல் விவகாரத்தில் மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் நற்சான்று வழங்கவில்லை. மாறாக, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தீா்ப்பில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறாத பட்சத்தில், தனக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-ஏ பிரிவின் கீழ் விசாரணை நடத்த பிரதமா் நரேந்திர மோடி அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

36 ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்காக பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, அருண் சௌரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது. மேலும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பில் தெரிவித்தது. எனினும், மனுதாரா்களிடம் உரிய ஆதாரம் இருந்தால் விசாரணை மேற்கொள்ளும்படி சிபிஐயை அணுகலாம் என்று ஒரு நீதிபதி தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com