தமிழகத்திலோ பற்றாக்குறை.. ஆந்திராவிலோ தள்ளுபடி விற்பனையில்.. அதிர்ச்சியில் மக்கள்!

ஆந்திரா, தெலங்கானாவில் பிரபலமான சி.எம்.ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான ஷாப்பிங் மாலில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்திலோ பற்றாக்குறை.. ஆந்திராவிலோ தள்ளுபடி விற்பனையில்.. அதிர்ச்சியில் மக்கள்!

ஆந்திரா, தெலங்கானாவில் பிரபலமான சி.எம்.ஆர் நிறுவனத்திற்கு சொந்தமான ஷாப்பிங் மாலில், தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சி.எம்.ஆர் நிறுவனத்திற்குச் சொந்தமான ஷாப்பிங் மால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் பிரபலமான ஒன்றாகும். இங்கு ஆடைகள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையையொட்டி,  மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சேலைகள்,  ஆந்திர ஷாப்பிங் மால்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இங்கு இலவசமாக வழங்கப்படும் சேலைகள், தள்ளுபடி விலையில் விற்கப்படுகின்றன.  ரூ.196 மதிப்புள்ள சேலைகள், தள்ளுபடி விலையில் ரூ.98-க்கும், ரூ.146 என மதிப்பிடப்பட்ட சேலைகள் ரூ.108-க்கும் விற்கப்படுகிறது. இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக மக்களுக்கு வழங்கப்படும் இலவச சேவைகள் அனைத்திற்கும் அரசு நிதி ஒதுக்கினாலும், அவை அனைத்தும் மக்களின் வரிப்பணமே ஆகும். அதுமட்டுமின்றி, கடந்த சில வருடங்களாக ரேஷன் கடைகளில் இலவச வேஷ்டி, சேலை முறையாக வழங்குவதில்லை என்று புகாரும் இருந்து வருகிறது. அதாவது ரேஷன் கார்டுகளில் அனைத்து பொருட்களையும் வாங்கத் தகுதியான முன்னுரிமை பெற்றவர்கள் பலருக்குக் கூட இலவச வேஷ்டி, சேலை கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில், அரசு இலவசமாக வழங்கும் இலவச சேலைகள் இங்குள்ள மக்களுக்கு முழுமையாக கிடைக்காத நிலையில், ஆந்திராவில் உள்ள மாலில் விலைக்கு விற்கப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com