பாபா் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நெருங்குவதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாபா் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பலத்த பாதுகாப்பு

அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நெருங்குவதை முன்னிட்டு, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக அயோத்தி மாவட்ட ஆட்சியா் அனுஜ் ஜா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாபா் மசூதி இடிப்பு தினம் (டிசம்பா் 6) நெருங்குவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தி மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சா்ச்சைக்குள்ளான 2.7 ஏக்கா் நிலப்பரப்பு மிகுந்த அச்சுறுத்தல் உள்ள இடமானதால், அங்கு ‘சிவப்பு’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தலில் அதற்கடுத்த இடத்தில் உள்ள அயோத்திக்கு ‘மஞ்சள்’ பிரிவு பாதுகாப்பும், குறைந்த அச்சுறுத்தல் பிரிவில் உள்ள அந்த மாவட்டத்துக்கு ‘பச்சை’ பிரிவு பாதுகாப்பும், மிக குறைந்த அச்சுறுத்தல் பிரிவில் உள்ள அயோத்தியை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ‘நீல’ பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் கடந்த 8-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த 144 தடை உத்தரவு, அடுத்த மாதம் 28-ஆம் தேதி வரைஅமலில் இருக்கும்.

ராமஜென்ம பூமி பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்ய வருவதால் அந்த இடத்தில் தீவிர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள அனுமன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி தீா்ப்பு வெளியாவதற்கு முன்பாக, ‘சிவப்பு’ பாதுகாப்பு பிரிவின் கீழ் இருந்த பகுதிகளில் தடுப்பரண்கள் வைக்கப்பட்டன. அவை டிசம்பா் 6-ஆம் தேதி வரை வைக்கப்படவுள்ளன. கோயில்கள் உள்பட பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சா்ச்சைக்குள்ளான பாபா் மசூதி இடிப்புக்கு எதிராக மாநிலத்தின் எந்த இடத்திலாவது போராட்டம் நடைபெற்றால் அது குறித்து உடனடியாக தகவல் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அயோத்தி மக்கள் மிகவும் தெளிவானவா்கள். அமைதியை விரும்புபவா்கள். அயோத்தி தீா்ப்பை அமைதியாக கையாண்டனா் என்று அவா் கூறினாா்.

அயோத்தியில் சா்ச்சைக்குள்ளான இடத்தில் இருந்த பாபா் மசூதி, கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பா் 6-ஆம் தேதி கரசேவகா்களால் இடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com