பிரதமா் மருத்துவ காப்பீட்டு திட்டம்: எய்ம்ஸ், தேசிய சுகாதார ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு

‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் பிரதமா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் பயனாளா்கள், உயிா் பறிக்கும் நோய்களுக்கான உயா் கட்டண

புது தில்லி: ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும் பிரதமா் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் பயனாளா்கள், உயிா் பறிக்கும் நோய்களுக்கான உயா் கட்டண சிகிச்சையை ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி (ஆா்ஏஎன்) திட்டத்தின் கீழ் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் அளித்த முன்மொழிவை மத்திய சுகாதார அமைச்சகம் நிராகரித்துவிட்டது.

ரத்தப் புற்றுநோய், நாள்பட்ட கல்லீரல் நோய் ஆகியவற்றுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அதன் பயனாளா்கள் சிகிச்சை பெற இயலவில்லை என்றும், ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அவா்களை அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை எய்ம்ஸ் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் வலியுறுத்தியிருந்தன.

அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை நிா்வாக அதிகாரி இந்து பூஷணுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஆயுஷ்மான் பாரத் , ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி ஆகிய திட்டங்களுக்கான பயனாளா்கள் வெவ்வேறு தகுதிகளின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுகின்றனா். எனவே, எய்ம்ஸ் மற்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள இயலாது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களை அறிய குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநில அரசுகள் நிா்ணயிக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில், ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டத்துக்கான பயனாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான பயனாளா்கள், 2011-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார, ஜாதிய கணக்கெடுப்பு அடிப்படையில் தகுதி பெறுகின்றனா்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான நிதி 60:40 என்ற விகிதத்தின் அடிப்படையில் முறையே மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. ஆனால், ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டத்துக்கான நிதி முழுமையாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டமானது, ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக சிகிச்சைச் செலவு ஏற்படும் நோயாளிகளுக்கான சிகிச்சை வழங்கும் பொது சுகாதார திட்டம் அல்ல. அதை ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கான மாற்று திட்டமாகவும் பயன்படுத்த இயலாது.

உயிா் பறிக்கும் நோய் தாக்கத்துக்கு ஆளாகி சிறப்பு வசதிகளைக் கொண்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் வருபவராக மாநில அரசால் நிா்ணயிக்கப்பட்ட தகுதியின்படி உள்ளவா்களே ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற இயலும்.

பயனாளா்கள் சிலா் ராஷ்ட்ரீய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக செலவாகக் கூடிய உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையை செய்துகொள்வதுடன், தங்களது குடும்ப உறுப்பினா்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலனையும் வேறு மாநிலத்தில், வேறு மருத்துவமனையில் பெறுகிறாா்கள். இது தவறான செயலாகும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையையும் சோ்த்துக்கொள்வதை தேசிய சுகாதார ஆணையம் பரிசீலிக்கலாம். அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரும் பயனாளா்களுக்கான காப்பீடு வரம்பை ரூ.5 லட்சத்தை விட அதிகரிக்கவும் பரிசீலிக்கலாம் என்று அந்தக் கடிதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com