மக்களவை குளிர்காலத் தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம்

அயோத்தி, ரஃபேல் தீர்ப்பு வெளியான பின்னணியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், மக்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும்
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர்.

புது தில்லி: அயோத்தி, ரஃபேல் தீர்ப்பு வெளியான பின்னணியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கும் நிலையில், மக்களவை அலுவல்கள் சுமுகமாக நடைபெறுவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். 

நாடாளுமன்ற  குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி, வரும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும். 

வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகள், அந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தீவிரமாக எழுப்பத் திட்டமிட்டுள்ளன. 

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு வழிகோலும் வகையில் தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர். 
கூட்டத்துக்குப் பிறகு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின்போது தாங்கள் விவாதிக்க விரும்புவதாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வெவ்வேறு விவகாரங்களைக் குறிப்பிட்டனர். 

நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுவிடம் அதுதொடர்பாக ஆலோசித்த பிறகு, முடிந்த வரையில் அவர்கள் குறிப்பிட்ட அனைத்து விவகாரங்களையும் கூட்டத்தொடரில் விவாதிப்பதற்கு முயற்சிக்கப்படும். 

கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றம் மக்களின் கேள்விகளுக்கு பதில் தரக் கூடிய பொறுப்புடையதாகும். எனவே, மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களையே கட்சியினர் அவையில் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன். அவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். கூட்டத் தொடர் அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார். 

கட்சியினர் கருத்து: அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய கூறியதாவது: 

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையாக, மாநில ஆளுநரும் தனியே நிர்வாகம் செய்து வருகிறார். இது அனுமதிக்கப்படக் கூடாது. எனவே, அந்த விவகாரத்தை கூட்டத்தொடரில் விவாதிக்க வலியுறுத்தினேன். அதேபோல், வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சரிவு, காற்று மாசு போன்ற விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிய வாய்ப்பும், நேரமும் வழங்கப்பட வேண்டும் என்று சுதீப் பந்தோபாத்யாய கூறினார். 

"தமிழை தொடர்பு மொழியாக்க வலியுறுத்தப்படும்':  கூட்டத்தில் பங்கேற்ற திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, "சென்னை ஐஐடி மாணவி இறப்பு, நாட்டின் பொருளாதார நிலை, வேலையின்மை பிரச்னை ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், கல்வியை மாநில பட்டியலில் 
கொண்டு வருதல், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை தொடர்பு மொழியாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் திமுக சார்பில் வலியுறுத்தப்படும்' என்றார். 

எத்தகைய சூழலில் கூட்டம்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக-சிவசேனை கூட்டணி அமைத்து எதிர்கொண்ட நிலையில், அதிகாரப் பகிர்வில் அக்கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்படாததால் அங்கு ஆட்சி அமைவதில் இழுபறி ஏற்பட்டது. இதனால், பாஜக-சிவசேனை கூட்டணியில் விரிசல் விழுந்துள்ளது. 

அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தும், அந்த முயற்சி பலனளிக்காததை அடுத்து மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 
சமீபத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. அத்துடன், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதற்கான முகாந்திரம் இல்லை என்ற தனது தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. 

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதால், மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் அவை அலுவல்களின்போது தீவிரமாக எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com